முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மாநாடு
சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் வனத் துறை அதிகாரிகள் பங்கேற்ற மாநாடு, கடந்த 10 ஆம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது. முதன் முறையாக இந்த மாநாட்டில் வனத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். மேலும் இந்த மாநாட்டில் தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
சட்டம் - ஒழுங்கு
மாநாட்டில், முதல் நாள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீராக இருப்பதை, மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து கண்காணிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு விஷயத்தில், நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப் பொருள் குற்றங்கள், பொருளாதார குற்றங்கள் போன்றவற்றை, அரசு ஒருபோதும் அனுமதிக்காது என பேசினார்.
டிஜிபி உத்தரவு!
சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் எந்த சமரசமும் செய்ய முடியாது என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக பேசினார். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு, டிஜிபி சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி உத்தரவுகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கலெக்டர்களுக்கு அறிவுரை!
மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மாவட்ட ஆட்சியர்கள் அவரவர் மாவட்டங்களில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த, கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்கலாம். அரசு திட்டங்களின் பயன் மக்களை சென்றடைகிறதா என்பதை உறுதி செய்து உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கும், உங்களை போன்ற அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 1 ரூபாய் செலவு செய்தால் கூட, அந்த 1 ரூபாய் சிந்தாமல், சிதறாமல் கடைக் கோடி மக்களும் சென்றடைய வேண்டும். அது தான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டு" என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க உத்தரவு!
மேலும், "ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து சொல்லுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு விதமான பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது, அதிலிருந்து எப்படி அரசுக்கு வருமானத்தை பெருக்குவது குறித்த ஆலோசனைகளையும் சொல்லுங்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில், பெருந்தொழில் இப்படி அனைத்து தரப்புக்குமே பயனளிக்கக் கூடிய திட்டங்களை சுதந்திரமாக நீங்கள் தெரிவிக்கலாம்" என்றார்.
அதிகாரிகள் கிலி!
மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு உத்தரவுகளை வழங்கி உள்ளார். மேலும் இது தொடர்பாக அடிக்கடி மாவட்டத்திற்கு வந்து ஆய்வு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகளால் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment