திருச்சியில் 11 ஆம் வகுப்பு மாணவனை திருமணம் செய்துகொண்ட பள்ளி ஆசிரியை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவன் வீட்டில் இருந்து மாயமானதாக தகவல் வெளியானது. அதுகுறித்து கேட்டபோது, அந்த மாணவனுக்கு கபடி விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்ததாலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாததாலும் வீட்டுக்கு பயந்து தலைமறைவாகி விட்டதாக கூறினர். ஆனால், அந்த மாணவன் தன்னை விட அதிக வயது கொண்ட பள்ளி ஆசிரியையுடன் வெளியேறி திருமணம் செய்துகொண்ட விஷயம் அம்பலமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 11 ஆம் வகுப்பு மாணவன் கடந்த 5- ம் தேதி மாயமாகினான். மேலும், அதே நாளில் அதே பள்ளியில் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த ஆசிரியை சர்மிளாவும் காணாமல் போயுள்ளார்.
ஒரே நாளில் இருவரும் மாயமாகியுள்ளதால் சந்தேகமடைந்த மாணவனின் பெற்றோர் 6ம் தேதி துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை என்றும் அதே பள்ளியில் பணிபுரியும் டீச்சர் சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் சர்மிளாவின் செல்போன் சிக்னலை டிராக் செய்தனர். அதில், சர்மிளா திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிக்கு என மாறி மாறி சென்றது தெரியவந்தது. தேடல் வேட்டையை தொடங்கிய போலீசார் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள சர்மிளாவின் தோழி வீட்டில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கலைச் செல்வன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில், பள்ளியில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மாணவன் மைனர் என்று தெரிந்தும் காதல் வலையில் வீழ்த்தி அவனை திருமணம் செய்து கொள்ளவும் டீச்சர் சர்மிளா முடிவெடுத்தார். அதன்படி, சம்பவம் அன்று மாணவனுடன் ஓட்டம் பிடித்த சர்மிளா திருவாரூரில் சுற்றித் திரிந்து பின்னர் தஞ்சை பெரியகோவிலில் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துகொண்டதும், பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழியின் வீட்டில் கணவன், மனைவியாக தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர் மைனர் என்பதால் பள்ளி ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பள்ளி சிறுவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்து திருமணமும் செய்துகொண்ட விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment