பஞ்சாபில் பஞ்சராகியதா காங்கிரஸ்? - அப்ப இனி அவ்ளோ தானா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, March 9, 2022

பஞ்சாபில் பஞ்சராகியதா காங்கிரஸ்? - அப்ப இனி அவ்ளோ தானா?

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதலில், பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவை தள்ளி வைக்கக் கோரி, பஞ்சாப் மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து 20 ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் வெளியாக உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவும் என தெரிய வந்துள்ளது. மேலும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை பெரும் என, பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. இதனால், ஆம் ஆத்மி கட்சியினர் குஷி அடைந்துள்ளனர். பாஜகவுடன் கைகோர்த்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொகுதிகள் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.
சொதப்பியதா காங்கிரஸ்?
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியில் வழக்கம் போல உட்கட்சிப் பூசல் மோதல் வெடித்தது. முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் அதிருப்தி அடைந்த கேப்டன் அமரீந்தர் சிங், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, கட்சியில் இருந்தும் விலகினார்.


இதை அடுத்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து விலக விவகாரம் பூதாகரமானது. சில நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பதாக, நவ்ஜோத் சிங் சித்து அறிவித்தார். கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக, பஞ்சாப் மாநில அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதலமைச்சராக பதவி ஏற்றார்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாவதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பு தான், பஞ்சாப் காங்கிரசில் இத்தகைய பெரிய குழப்பங்கள் நிலவின. இதனால் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு சரியத் தொடங்கியது. இது மட்டுமல்லாமல், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதிலும் பஞ்சாப் காங்கிரசுக்குள் பல முரண்பாடுகள் இருந்தன. நவ்ஜோத் சிங் சித்துவா? சரண்ஜித் சிங் சன்னியா? என்ற குழப்பம் நிலவி வர, ஒருவழியாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமாதானப் பேச்சை அடுத்து, வாக்குப்பதிவுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, முதலமைச்சர் வேட்பாளராக, சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டார்.
இப்படி பல்வேறு குழப்பங்கள், உட்கட்சிப் பூசலை சந்தித்த காங்கிரஸ், தேர்தலில் தோல்வியை தழுவும் என, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த கணிப்புகள் உண்மையாகுமா என நாளை பிற்பகல் தெரிந்து விடும். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "சமயம் தமிழ்" இணையதளம் மற்றும் சமூக வலைதள பக்கங்களுடன் தொடர்பில் இருங்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad