ஒடேசா துறைமுக நகரைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருங்கடலுக்கு அருகில் உள்ள உக்ரைனின் மிக முக்கிய பொருளாதார கேந்திரமான ஒடேசா துறைமுக நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமான முயற்சிகளில் இறங்கியுள்ளது.
விரைவில் ஒடேசா நகரம் ரஷ்யர்கள் வசமாகும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். அந்த அளவுக்கு பக்காவாக பிளான் போட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறதாம் ரஷ்ய ராணுவம்.
உக்ரைனை சுற்றி வளைத்து அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது ரஷ்யா. இதுவரை குட்டி குட்டி நகரங்களைக் கைப்பற்றியுள்ளது. பெரிய நகரங்களுக்கு ஸ்கெட்ச் போட்டு வைத்து கபளீகரம் செய்யக் காத்திருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் மிக முக்கியமான பொருளாதார கேந்திரமாக கருதப்படும் ஒடேசா துறைமுக நகருக்குக் குறி வைத்து களத்தில் இறங்கியிருக்கிறது ரஷ்யா.
இதுகுறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த பாதுகாப்புத்துறை ஆலோசகரான சர் ரிச்சர்ட் பேரன்ஸ் கூறுகையில் இனிமேல் ரஷ்யாவின் உத்திகள் அதி தீவீரமாகும். மிகவும் தெளிவாக திட்டமிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். உக்ரைன் ராணுவத்தை மிக வேகமாக அவர்கள் தாக்குவார்கள். உக்ரைன் ராணுவத்தின் சப்ளை லைனை துண்டிப்பார்கள். அவர்களது ஆயுதங்களை காலி செய்யும் வகையில் தாக்குதல் தீவிரமாகும். விமான தளங்கள் தவிடுபொடியாகும்.
எந்த நகரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த நகரம் மீது தாக்குதலை தீவிரப்படுத்துவார்கள். எனது கணிப்பு என்னவென்றால் ஒடேசா துறைமுக நகருக்கு ரஷ்யா குறி வைத்துள்ளது என்பதே. விரைவில் ஒடேசா நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என்றார் அவர்.
கருங்கடலையொட்டி உள்ள நகரம்தான் ஒடேசா. துறைமுக நகரம், பொருளாதார ரீதியில் உக்ரைனுக்கு முக்கியமான நகரம். 10 லட்சம் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இந்த நகரை ரஷ்யா கைப்பற்றி விட்டால், உக்ரைனின் கருங்கடல் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்திக்கும்.
அதேசமயம், கீவ் நகரையும் ரஷ்யப்படை அதிரடியாக தாக்க ஆரம்பித்துள்ளது. ஒரே நேரத்தில் உக்ரைனின் முக்கிய நகரங்களை அதிரடியாக கைப்பற்றவும் ரஷ்யப் படையினர் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரஷ்யப் படையினர் இடையில் சுணங்கியது போல காணப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. பல இடங்களில் தாக்குதல் அதி வேகம் கண்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
ரஷ்யத் தரப்பில் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. பொதுவாகவே, உக்ரைன் போர் தொடங்கியது முதலே சரியான தகவல் எதுவும் வெளியாவதில்லை, காரணம் அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் அனைத்துமே உக்ரைன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளது, இரு தரப்பு நிலவரம் குறித்த தெளிவான, சரியான தகவல்களை அறிய முடிவதில்லை. பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்டவை ரஷ்ய தரப்பு மீது தடை விதித்து அதை அமல்படுத்துவதால் ரஷ்யத் தரப்பிலிருந்தும் எந்தத் தகவல்களும் உலகுக்குக் கிடைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment