அசானி புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, March 21, 2022

அசானி புயல்: பள்ளிகளுக்கு விடுமுறை!

அசானி புயல் காரணமாக அந்தமானில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு அசானி என பெயரிடப்பட்டுள்ளது.

இதனிடையே, அசானி புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்கதேச கடற்கரையை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர்- வங்கதேசம் இடையே கடலோர பகுதியில் மார்ச் 22 ஆம் தேதி கரையை கடக்கும். இந்தியாவுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அசானி புயலால் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இன்றும் நாளையும் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு 200 கி.மீ. வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதியிலும் அந்தமான் தீவுகளுக்கு 100 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கிலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று புயலாக மாறும் நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அசானி புயல் காரணமாக பலத்த மழை, சூறாவளி காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபர் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளது. அந்தமான் நிர்வாகம் சார்பில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad