கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆட்டை மீண்டும் கோவிலுக்கு எதிரே விட்டு சென்ற திருடர்கள்
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கோவிலம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நம்பி (61). இவர் தன்னுடைய வீட்டில் நிறைய ஆடுகளை வளர்த்து வருகிறார். பகலில் மேய்ச்சலுக்குச் செல்லும் செல்லும் ஆடுகளை இரவில் வீட்டின் அருகே கட்டிப் போட்டு வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் தனது வீட்டில் கட்டிப் போட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து தூக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் ஆட்டைத் தூக்கிச் செல்வது அவரது வீட்டில் இருந்த சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது. ஆட்டைத் திருடிய நபர் முகத்தை மறைக்கும் வகையில் முகமூடி அணிந்தபடி கையில் அரிவாளுடன் வந்து ஆட்டைத் திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
திருடிச் செல்லப்பட்ட ஆடு, கோயிலுக்குக் காணிக்கையாக நேர்ந்து விடப்பட்டிருந்தது. கோவிலம்மாள்புரத்தில் உள்ள சுடலையண்டவர் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டு மூன்று வருடங்களாக வளர்த்து வந்த ஆட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் நம்பி மிகுந்த வருத்தம் அடைந்தார்.
ஆடு திருட்டு போனது தொடர்பாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் செய்ததுடன், ஆட்டைத் திருடியவர்கள் குறித்து சிசிடிவி-யில் பதிவான காட்சிகளையும் போலீஸாரிடம் அளித்திருந்தார். போலீஸார் அந்தக் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
திருடப்பட்ட ஆடு கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆடு என்பது தெரியவந்ததால், அதைத் திருடிச் சென்ற மரிம நபர்கள் அதிர்ச்சியடைந்தனர். சாமியின் சாபத்துக்கு ஆளாகிவிடுவோமோ எனப் பயந்த மர்ம நபர்கள், ஆட்டைக் கொண்டு சென்று சுடலையாண்டவர் கோயிலில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.
நம்பியின் ஆடு, கோயிலில் நிற்பதைப் பார்த்த அப்பகுதி மக்கள், ஆட்டின் உரிமையாளரான நம்பிக்கு தகவல் தெரிவித்தார்கள் உடனடியாக அங்கு சென்று பாரத்த அவர், கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்ட தன்னுடைய ஆட்டைப் பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்குக் கொண்டு சென்றார்.
No comments:
Post a Comment