அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி இருப்பது, எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. ஓபிஎஸ் வேண்டும் என்றே செய்தாரா? என்பது குறித்து விசாரணையில் இறங்கி உள்ள எடப்பாடி கோபத்தில் என்ன முடிவு எடுப்பாரோ? என நிர்வாகிகள் கலக்கமடைந்து உள்ளனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவில் கடுமையான அலை வீசுகிறது.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் சொந்த மாவட்டமான தேனி நிர்வாகிகள் கட்சியில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் சசிகலா குறித்த இந்த கோரிக்கையை அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் எடுத்து விளக்கி, தீர்மானமாக நிறைவேற்றி, அதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா திடீரென சசிகலாவை சந்தித்து பேசி, தனது ஆதரவை அளித்துள்ளார். இதன் காரணமாக ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.ராஜா உள்பட சிலரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிமுக நீக்கி உள்ளது.
அதிமுகவின் இந்த அதிகாரப்பூர்வ உத்தரவில் உத்தரவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 2 பேரும் கையெழுத்து போட்டுள்ளனர்.
மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் கட்சியினர் எந்த விதத்திலும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது எனவும் அதிமுக மேலிடம் தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் இருக்கும் தனது பண்ணை வீட்டிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென வருகை தந்தார்.
அப்போது மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், திருப்பூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் சண்முகம், செஞ்சி முன்னாள் மக்களவை உறுப்பினர் ஏழுமலை ஆகியோர் தற்போது ஓபிஎஸ் சந்தித்து பேசினர்.
இவர்களைத் தொடர்ந்து அதிமுக கட்சியில் இருந்து இன்று நீக்கி வைக்கப்பட்ட தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன் வருகை தந்தார். பின்னர், அவர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார்.
இருவரும் இரவு 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரமாக பேசினர். இந்த பேச்சுவார்த்தையில் என்ன முடிவுகள் எட்டப்பட்டது? என்று குறிப்பிடப்படவில்லை. பின்னர் அனைவரும் கிளம்பி சென்றனர்.
இதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் கைலாச பட்டியலில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து பெரியகுளம் அக்ரகார தெருவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த விவகாரம் காரணமாக தேனி மாவட்ட அதிமுகவில் பெரும் பரபரப்பாப சூழல் நிலவி வருகிறது.
இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கட்சியில் சட்டம் போடுபவர்கள் அதை தாங்களும் பின்பற்ற வேண்டும். கட்சி விதி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொருந்தும். நீக்கப்பட்ட நிர்வாகி ஒருவருடன் சந்திப்பு என்பது கட்சியை பொறுத்தவரை குற்றம்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை சந்தித்ததால் அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் செயல்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் ஓபிஎஸ் நடந்துகொண்டு இருப்பதோடு, கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டுள்ளார்.
நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்ததால் ஓ.ராஜா உள்ளிட்ட தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். அதே பாணியில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முருகேசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசி உள்ளதால் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தி அடைந்துள்ளார்.
இதன் காரணமாக எந்த நேரத்திலும் ஓபிஎஸ்க்கு எதிரான உத்தரவை எடப்பாடி பழனிச்சாமி பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது. இப்படியே போனால் அதிமுகவின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என தெரியவில்லை. இவ்வாறு அதிமுக மூத்த நிர்வாகி கூறினார்.
No comments:
Post a Comment