தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டார்கெட் முடிப்பதற்காக அப்பாவிகளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளியை அழைத்து சென்று குடும்ப கட்டுப்பாடு செய்துள்ள கும்பலின் கொடூர சம்பவம் தற்போது பூதாகரமாகி வருகிறது.
வேம்பார் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசேர்மன். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் இரு பிள்ளைகளும் உள்ளனர். விறகு வெட்டும் வேலை செய்து வந்த முத்துசேர்மனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் பழையபடி அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி வீட்டில் இருந்த முத்துவை காண வந்த சூறாவளி என்பவர் விறகு வெட்டும் வேலை இருப்பதாகக்கூறி வெளியே அழைத்து சென்றுள்ளார். அவருடன் சில பேர் வந்துள்ளனர்.
பின்னர் முத்துசேர்மனை அந்த கும்பல் சாயல்குடி ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்று வாயில் பஞ்சுவை திணித்து வலுக்கட்டாயமாக அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அன்று மாலை பஞ்சவர்ணம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது முத்துசேர்மன் வலி தாங்காமல் கதறி அழுதுள்ளார். மனைவியிடன் நடந்ததை விவரித்த முத்துசேர்மன், மருத்துவமனையில் தனக்கு கொடுத்த 1100 ரூபாய்க்கான காசோலையை நீட்டியுள்ளார்.
உடனே உறவினர்களை அழைத்துக்கொண்டு ஆரம்ப சுகாதாரத்திற்கு புறப்பட்ட பஞ்சவர்ணம் ' எனது கணவனின் விருப்பம் இல்லாமல் எப்படி குடும்ப கட்டுப்பாடு செய்யலாம்? என கேட்டு முறையிட்டுள்ளார். ஆனால் அவர்களோ, இதனால் உயிர் ஒன்றும் போகாது, குடும்ப கட்டுப்பாடு யார் வேண்டுமானாலும் செய்யலாம், பிரச்சினையை பெரிதாக்கமால் 3 ஆயிரம் ரூபாயை கூடுதலாக வாங்கி செல்லுங்கள் என ஏளனமாக பதிலளித்துள்ளனர். மேலும், இந்த கும்பல் மதுவுக்கு அடிமையானவர்களை குறி வைத்து குடும்ப கட்டுப்பாடு செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment