முழு ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள காகித பற்றாக்குறையால் இந்த ஆண்டு பள்ளி பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அண்டை நாடான இலங்கையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ஏற்கனவே பெற்றிருந்த கோடிக் கணக்கான கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை அந்நாட்டுக்கு உருவானது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டுக்கு சுமார் 6.9 பில்லியன் டாலர் (ரூ.52 ஆயிரம் கோடி) கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இது, அந்நாட்டில் கடுமையான பணவீக்கத்தை உருவாக்கி உள்ளது. இலங்கையின் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணியும் பாதிக்கும் கீழாக குறைந்திருக்கிறது.
இறக்குமதி செய்ய கூட பணம் இல்லாததால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு கடன் வழங்கி உதவி வருகின்றன.
இந்நிலையில், போதிய நிதி இல்லாததால் தாள்களை அச்சிடவும், இறக்குமதி செய்யவும் இலங்கை அரசு திணறி வருகிறது. தாள்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அடுத்த வாரம் நடைபெறவிருந்த தேர்வுகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேற்கு மாகாணத்தின் கல்வித் துறை மாகாண இயக்குனர் பிரியந்த் ஸ்ரீலால் நோனிஸ் மண்டல இயக்குனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி உள்ளது. பேப்பர் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பேப்பருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளுக்கான இறுதித் தேர்வுகள் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்படுகின்றன என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, எரிபொருட்களின் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீண்டவ ரிசையில் காத்திருந்து பொது மக்கள் மண்ணெண்ணெய் வாங்கிச் சென்றனர்.
No comments:
Post a Comment