அண்ணா பல்கலைக்கழக தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்
தமிழகத்தில் கொரொனோ பரவல் காரணமாக இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, பொறியியல் மாணவர்கள் உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெற்றன.
கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் வழக்கமாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். கொரொனோ பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் மேலும் தள்ளிவைக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரம் முதல் மார்ச் வரை நடைபெற்று முடிந்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வுகளை பொறுத்தவரை, ஆன்லைனில் தேர்வுகளை எழுதி முடித்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, கல்லூரி பரிந்துரையின்படி, கூகுள் கிளாஸ்ரூம், வாட்ஸ் ஆப், இமெயில் போன்ற ஏதாவது ஒன்றில் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து மாணவர்கள் பதிவேற்ற வேண்டும். தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அதில் பதிவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஆப்சென்ட் போட்டு விடுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்பிறகு ஐந்து நாட்களுக்குள்ளாக ஒரிஜினல் விடைத்தாள்களை கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன் தொடர்ச்சியாக, இதுபற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தாமதமாக பதிவேற்றப்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படும். தாமதமாக அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் திருத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தாமதமாக விடைத்தாள்கள் அனுப்பியதால் 10 ஆயிரம் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது. மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். அனைவரது விடைத்தாள்களும் திருத்தப்படும்.” என்று விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற உள்ளது. ஆன்லைன் தேர்வுகள் பொருத்தவரையில் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது எனவே மாணவர்கள் நேரடி முறையில் தேர்வு எழுத தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். தமிழ் வழியில் பொறியியல் படிப்பதற்கு தேவையான முக்கியத்துவத்தை தமிழக அரசு வழங்கும் என்றும் அப்போது அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்
No comments:
Post a Comment