தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்திலேயே இடமாறுதல் கோரியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கோரியது, வன விலங்குகள் பாதுகாப்பு உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, தமிழ்நாடு அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் கோரியதாகவும், அவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதால் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டாலும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருப்பார் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், அதிகாரியை இடமாற்றம் செய்வது என்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும், வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமிப்பது தொடர்பாக கேரள அரசு, மார்ச் 17ஆம் தேதி பதிலளிக்க உள்ளதால், அதுசம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்கும் போது, சேகர்குமார் நீரஜ் இடமாற்றம் செய்வது குறித்த விவகாரம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என தெரிவித்து, விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment