*விபத்தில் பெற்றோரை இழந்த அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை!*
விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவு செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில், தமிழக அரசு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்ட காலமாக செயல்படுத்தி வருகிறது.
*இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:*
*கேள்வி: 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்க என்னென்ன தகுதிகள்?*
பதில்: வருவாய் ஈட்டி வந்த தந்தை
அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ
அல்லது இருவருமோ விபத்தில்
உயிரிழந்து இருந்தாலோ அல்லது
அவர்களால் இனி பொருளீட்ட முடியாது
என்றளவுக்கு உடல் உறுப்புகள்
நிரந்தர முடக்கமாகி இருந்தாலோ
அவர்களின் பிள்ளைகள் இத்திட்டத்தின் கீழ்
கல்வி உதவித்தொகை பெற முடியும்.
ஒருமுறை மட்டுமே இத்தொகை
வழங்கப்படும்.
*கேள்வி: இதற்கான அரசாணை எப்போது வெளியிடப்பட்டது?*
பதில்: இந்த கல்வி உதவித்திட்டத்திற்கான
முதல் அரசாணை (நிலை) எண். 39,
நாள்: 30.03.2005.
கடந்த 2005ம் ஆண்டுதான்
முதன்முதலில் இத்திட்டம்
அமலுக்கு வந்தது. அப்போது,
இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம்
ரூபாய் உதவித்தொகை
வழங்கப்பட்டது.
பின்னர் கடந்த 27.11.2014ம் தேதியன்று
மேற்சொன்ன அரசாணை திருத்தப்பட்டு,
புதிய அரசாணை (நிலை) எண். 195 வெளியிடப்பட்டது.
இந்த புதிய ஆணையின்படி,
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய்
விபத்தில் உயிரிழக்க நேரிட்டால்
அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டால்
அவர்களின் குழந்தைகளுக்கு
வழங்கப்பட்டு வந்த கல்வி
உதவித்தொகை 75 ஆயிரம் ரூபாயாக
உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
*கேள்வி: தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இத்திட்டம் பொருந்துமா?*
பதில்: இந்த திட்டத்தின் கீழ்
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும்
மாணவ, மாணவிகள் மட்டுமே
கல்வி உதவித்தொகை பெற முடியும்.
தனியார் சுயநிதி பள்ளிகளில் பயிலும்
மாணவ, மணவிகளுக்கு
இத்திட்டம் பொருந்தாது.
*கேள்வி: தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள்?*
பதில்: ஆண்டுக்கு சராசரியாக
500 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்
பயன்பெறுகின்றனர். கடந்த 2019-2020ம்
கல்வி ஆண்டில் அதிகபட்சமாக
550 மாணவ, மாணவிகள்
பயனடைந்துள்ளனர்.
4.70 கோடி ரூபாய் உதவித்தொகை
வழங்கப்பட்டுள்ளது.
2016 – 2017ம் கல்வி ஆண்டில்
இத்திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய்
உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
*கேள்வி: உதவித்தொகை வழங்கும் நடைமுறைகள் என்ன?*
பதில்: இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு
நேரடியாக ரொக்கமாக கல்வி
உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
தகுதி உள்ள மாணவ, மாணவிகளின்
பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி
கழகத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு,
அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும்
முதிர்வுத்தொகையைக் கொண்டு
அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்புச்
செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும்.
*கேள்வி: எவ்வாறு விண்ணப்பிப்பது?*
பதில்: வருவாய் ஈட்டும் தந்தை அல்லது
தாய் அல்லது இருவரையும் விபத்தில்
இழந்த அல்லது அவர்களுக்கு நிரந்தர
முடக்கம் ஏற்பட்டிருந்தாலோ அத்தகைய
பெற்றோரின் பிள்ளைகள் அவரவர்
படித்து வரும் பள்ளியின் தலைமை
ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
*கேள்வி: ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பயன்பெற முடியும்?*
பதில்: பாதிக்கப்பட்ட குடும்பங்களில்
எத்தனை மாணவ, மாணவிகள்
படித்து வந்தாலும் அவர்கள்
அனைவருமே இத்திட்டத்தில்
பயன் பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்தப்
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலகங்களை நேரில் அணுகி
தெரிந்து கொள்ளலாம்.
*கேள்வி: இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் என்னென்ன?*
பதில்: 1. தலைமை ஆசிரியர் / வட்டாரக்கல்வி அலுவலர் முகப்புக் கடிதம்
2. பயன்பெறும் மாணவ, மாணவியின் பெற்றோர் கடிதம்
3. இத்திட்டத்தில் கல்வி உதவி பெறுவதற்கான விண்ணப்பம்
4. தலைமை ஆசிரியர் பரிந்துரைக் கடிதம்
5. படிப்புச்சான்று
6. முதல் தகவல் அறிக்கை
7. பிண ஆராய்வுச்சான்று
8. இறப்புச் சான்றிதழ்
9. வருமானச் சான்றிதழ்
10. வாரிசு சான்றிதழ்
11. பயனாளிகளின் பெற்றோர் விபத்தில் இறந்துள்ளார் என்பதற்கான வட்டாட்சியர் சான்று
12. விதவை சான்று (பயனாளியின் தாயார் விதவை என்பதற்கான சான்று / பொருளீட்டும் தாயார் இறந்திருந்தால் அதற்குரிய சான்று)
13. குடும்பம் வறுமை நிலையில் உள்ளது என்பதற்கான வட்டாட்சியர் சான்று
14. ஆதார் அட்டை நகல் (பெற்றோர் மற்றும் மாணவர்)
15. வங்கி கணக்கு புத்தக நகல் (மாணவர், பெற்றோர் இணைப்புக் கணக்கு)
16. குடும்ப அட்டை நகல்
17. படிவம் ஏ, பி மற்றும் சி
No comments:
Post a Comment