'தரமான கல்வி கொள்கையை உருவாக்குவதில், தமிழக அரசுக்கு அக்கறை இல்லை,&'&' என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்தார்.
முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியதாவது:
மாநில கல்விக் கொள்கையை வகுக்க, 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே இந்த அறிவிப்பு வந்துள்ளது. குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஓராண்டு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் பெரும்பாலான பரிந்துரைகள், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும்.
குழுவில், மூத்தவர்கள், கல்வி செயல்முறை மற்றும் நிர்வாகத்தில் ஆழ்ந்த அறிவைப் பெற்ற அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள் யாரும் இல்லை. தமிழகம் மிகச்சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிய அறிஞர்களின் மண்டலமாக உள்ளது. அரசு ஏன் இத்தகைய அறிஞர்களை குழுவில் இணைக்கவில்லை என்பது தெரியவில்லை.
விசாரணை குழு அல்ல
கல்வியாளருக்கு பதில் நீதித்துறையை சேர்ந்த ஒருவர், குழுவுக்கு தலைமை வகிக்கிறார். இக்குழு விசாரணை அல்லது உண்மையை கண்டறியும் குழு அல்ல. குழுவின் தலைவருக்கு கல்விப் பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகளில் ஆழ்ந்த அனுபவம் இருப்பது அவசியம். குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் கல்வி அனுபவம் இல்லாதவர்கள்.
மேலும், மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் நபர்களே குழுவில் உள்ளனர். பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக உள்ளனர்.இக்குழு மிகச்சிறந்த மத்திய அரசின் கல்விக் கொள்கையை விட சிறந்த கல்விக் கொள்கையை மாநில அரசுக்கு உருவாக்கி கொடுக்கும் என்ற சந்தேகம் கல்வியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி தொடர்பான எந்தவொரு தேசிய ஒழுங்குமுறை அல்லது கொள்கையும், மாநில அரசின் கொள்கைகளை விட முன்னுரிமை பெறுகிறது. தேசிய கல்வி நிறுவனங்களான, யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., - என்.எம்.சி., ஆகியவை ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த தேவையான அனைத்து விதிகளையும் வகுத்துள்ளன.
அனைத்து பல்கலைகள், உயர் கல்வி நிறுவனங்கள் இந்த விதிகளை பின்பற்ற துவங்கியுள்ளன. அனைத்து பல்கலைகளும் தங்களது பாடத்திட்டத்தை மறுசீரமைத்து புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், மாநிலத்தின் மற்றொரு கல்விக் கொள்கைக்கு எந்த விதத்தில் வாய்ப்பு இருக்கும்?
அரசியல் நோக்கம்
பல்கலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் யு.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.டி.சி.இ.,யின் தேசிய வழிகாட்டுதல்களை அமல்படுத்தாத பட்சத்தில், அவை அளிக்கும் நிதி, மானியங்கள் பெறுவதில் சிக்கல் உள்ளது. &'நாக்&', என்.பி.ஏ., அங்கீகாரங்கள் மற்றும் என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை, பட்ட - பட்டய படிப்புகளுக்கான அங்கீகாரம், உலகளவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இணையான கல்வி தகுதி, சாதனை உள்ளிட்டவற்றை பெறுவதிலும் பல தடைகளை சந்திக்க நேரிடும். இந்த அனைத்து பிரச்னைகளும் மாணவர்களின் கல்வித் தகுதியை குறைப்பதோடு, வேலைவாய்ப்பு, உலகளவில் உயர் கல்வி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
உள்ளூர் தேவை, அவசியங்கள் மற்றும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான உத்திகள், வழிகாட்டுதல்களை மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள குழுவால் ஏற்படுத்த முடியும். இதை செயல்படுத்த தற்போதுள்ள குழுவை விட, சிறந்த குழு தேவை. குழுவை அமைத்தது ஒரு தகுதியான கல்வி கொள்கை உருவாக்கும் நோக்கத்தை விட, அரசியல் நோக்கத்தையே காட்டுகிறது. இது, தரமான கல்வி கொள்கையை உருவாக்குவதில், மாநில அரசுக்கு அக்கறையின்மையை காட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment