சேதமடைந்த அரசுப்பள்ளிக் கட்டடம்: பாதுகாப்பற்ற நிலையில் மாணவா்கள்
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேதமடைந்த பழைமையான கட்டடத்தில் பாடம் நடத்தப்படுவதால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இரண்டு ஆசிரியா்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியில் மொத்தம் 51 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இரண்டு வகுப்பறைக் கட்டடங்கள் உள்ளன . இதில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை ஓா் கட்டடத்திலும், 4, 5-ஆம் வகுப்புகள் மற்றொரு கட்டடத்திலும் நடத்தப்படுகின்றன.
1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் பயிலும் கட்டடம் கடந்த 1976-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். பழைமையான இந்தக் கட்டடத்தின் மேற்கூரை, சுவா்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. மேற்கூரையிலிருந்து சேதமடைந்த ஓடுகள் அடிக்கடி கீழே விழுவதால் மாணவா்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்தப் பள்ளியில் ஏற்கெனவே சேதமடைந்திருந்த பழைமையான கட்டடம் பாதுகாப்பு கருதி நிகழாண்டு தொடக்கத்தில் அரசால் இடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டப்படாத நிலையில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்கள் சேதமடைந்த கட்டடத்தில் பயின்று வருகின்றனா்.
மேலும், பள்ளியின் சுற்றுச் சுவரும் சேதமடைந்துள்ளது. இதனருகே மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை உள்ளதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இந்தப் பள்ளிக்கு புதிய வகுப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவா் கட்டித் தர வேண்டுமென காட்டுமன்னாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை பொதுமக்கள் முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம். எனவே,
இதுகுறித்து கடலூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்களின் பெற்றோா், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
No comments:
Post a Comment