சென்னை மேயர் பிரியா ராஜன் விடுத்துள்ள திடீர் எச்சரிக்கை கவுன்சிலர்களை பீதியில் உறைய செய்துள்ளது.
கவுன்சிலர்களை பீதியில் உறைய வைக்கும் எச்சரிக்கை மூலம் சென்னை மேயர் பிரியா ராஜன் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கி உள்ளார்.
மேயர் பிறப்பித்த திடீர் உத்தரவு
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த மார்ச் 4ம் தேதி சென்னை மாநகராட்சியின் மேயராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் சென்னை மேயர் பிரியா ராஜன் ரொம்பவே சுறுசுறுப்பாகவே காணப்படுகிறார். கடந்த மார்ச் 15ம் தேதி சென்னையில் நடந்து வருகின்ற மழைநீர் வடிகால் பணிகளுக்கான ஒப்பந்த ஆணைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒப்பந்தாரர்களிடம் பணி ஆணைகளை வழங்கிய மேயர் பிரியா ராஜன் பணியை உடனடியாக துவக்கி பருவ மழைக்கு முன் முடிக்க வேண்டும் என, அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேயரின் இந்த மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
விதி மீறும் கட்டிடங்களுக்கு சீல்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, சென்னை மாநகராட்சி வழங்கும் கட்டட அனுமதி அடிப்படையில் மட்டுமே கட்டடம் கட்டப்பட வேண்டும். விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என ஏற்கனவே சென்னை மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி ஆங்காங்கே கட்டிடங்கள் கட்டப்படுவதாக தெரிய வந்து உள்ளதால் மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இவ்வாறாக சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் துணிச்சலுடன் பல்வேறு அதிரடியை அரங்கேற்றி வருகிறார். மேயரின் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
திமுகவின் இமேஹுக்கு ஆபத்து
இதற்கிடையே சமீபகாலமாக சென்னையில் உள்ள பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தங்களது மனைவிகளின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் கவுன்சிலரின் கணவன்மார்கள் புதிதாக வீடு கட்டுபவர்களை மிரட்டி பணம் வசூலிப்பது, காவல் துறையினரை அவமானப்படுத்துவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே ஆரம்பமாகி இருக்கிறது. இது தொடர்பான பரபரப்பு வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி வைரலாகி வருகிறது. இதை பார்க்கும், பொதுமக்கள் திமுக அரசுக்கு எதிராக முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றனர். இவர்களில் சிலர் திமுக அரசு என்றாலே இப்படிதான் இருக்கும் என்கிற ரீதியில் ஏகத்துக்கும் விமர்சிக்கும் நிலை வந்துள்ளது. கூடவே இப்படிப்பட்டவர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் திமுகவின் இமேஹுக்கு ஆபத்து என்று, தங்களது ஆதங்கத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
கனிமொழி எம்.பி எச்சரிக்கை
ஏற்கனவே, இது தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார். அதாவது, பெண் கவுன்சிலர்கள் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். அவர்களுடைய பணிகளில் குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் மூக்கை நுழைக்க கூடாது. பெண் கவுன்சிலர்களை சுயமாக பணி செய்ய விடாமல் தடுத்து விட்டு வீட்டில் இருக்கும் ஆண்கள் அதிகாரத்தை கையில் எடுக்க கூடாது. குறிப்பாக வீட்டில் இருக்கும் கணவர், அப்பா, அண்ணன் உள்ளிட்டோர் வேலைகளை செய்வார்கள் என பெண் கவுன்சிலர்கள் சும்மா இருந்து விடக் கூடாது என குறிப்பிட்டு இருந்தார். ஆனாலும் எவரும் கேட்டபாடில்லை என்பதற்கு சாட்சியாக இங்கும் அங்கும் ஒரு சம்பவங்கள் நடந்தபடிதான் இருக்கிறது. இந்த சூழலில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் திறந்து வைத்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை ஆணையர் உடன் இருந்தனர்.
பீதியில் உறைந்த கவுன்சிலர்கள்
இதைத் தொடர்ந்து, மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: பெண்கள் பாதுகாப்பிற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தடுப்பதற்காகவும் பாலின நிகர் மேம்பாடு மையம் என்கின்ற புதிய திட்டம், தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அடாவடி செய்வதாக கூறுகிறீர்கள். கவுன்சிலர்கள் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டு உள்ளதோ அவர்கள் தான் அந்த பணியை செய்ய வேண்டும். அதையும் மீறி, எவரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்களின் மீது தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும். கவுன்சிலர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும். ஏதாவது அவர்களுக்கு தெரியாத பட்சத்தில் தேவையான அறிவுரைகளும் வழங்கப்படும். இவ்வாறு சென்னை மேயர் பிரியா ராஜன் கூறினார். சென்னை மேயர் பிரியா ராஜன் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையால் கவுன்சிலர்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர்.
No comments:
Post a Comment