கோடை வெயில் கொளுத்தி வருவதால் பள்ளி மாணவர்கள் நலன் கருதி சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021-22ம் கல்வி ஆண்டு முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டன.
இதை தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரம் அடைந்தது.
இதன் காரணமாக 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் கடந்த டிசம்பர் 24ம் தேதியும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளில் கடந்த மாதம் 13ம் தேதியும் நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.
மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் அடைப்பு என திடீர் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொரோனா நோய் பரவல் ஒரளவு குறைந்துள்ளதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு ஊரடங்கு கட்டுப்பாடு அதிரடியாக விலக்கி கொள்ளப்பட்டது.
மேலும், கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிக்காட்டு நெறிமுறையை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் ராஜம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பிரதி சனிக்கிழமை தோறும் பள்ளிகளுக்கு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும்.
ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வரும் உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் மாற்றுப்பணியில் தேவைக்கு அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை உதவிப்பெறும் பணி செய்ய ஆணை வழங்க வேண்டும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக மாற்று பணிக்கு சென்ற ஆசிரியர்களுக்கு பதிலாக அந்த இடத்தில் உபரி ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். பணி வரன்முறை, தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை வேண்டி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் முகாம் நடத்தி உடனுக்குடன் ஆணை வழங்க மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் நல்லமணி, சூரியமூர்த்தி, ராஜேஷ், ஜெயபாரதி, தேன்மொழி, ரவிச்சந்திரன், வேல்முருகன், சங்கர், நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். எனவே மாணவர்கள் நலன் கருதி சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment