சட்டவிரோத பங்களா: காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, April 2, 2022

சட்டவிரோத பங்களா: காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்!

சோனியா காந்தியின் செயலாளரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் பங்களா தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
டெல்லி C-II/109 சாணக்யபுரியில் உள்ள அமைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் பங்களாவை காலி செய்யுமாறு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஆவணங்களின்படி, மேற்கண்ட முகவரியில் உள்ள பங்களா காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சோனியா காந்தியின் செயலாளர் வின்செண்ட் ஜார்ஜ் என்பவர் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், பொது வளாகத்தில் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், பங்களாவுக்கான ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட, காலி செய்யாமல் தொடர்ந்து ஆக்கிரமித்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, அந்த பங்களாவை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது வளாகச் சட்டம் 1971 இன் பிரிவு 3B இன் துணைப்பிரிவு (1) இன் படி, தனிப்பட்ட விசாரணைக்காக 3 வேலை நாட்களுக்குள் ஆஜராக வேண்டும். நேரிலோ அல்லது முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ ஆஜராகலாம். அப்போது ஏன் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தையும், இந்த விஷயத்துடன் தொடர்புடைய அனைத்து முக்கிய கேள்விகளுக்கும் தகுந்த ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்திலோ, குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆஜராகத் தவறினாலோ அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நோட்டீஸில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளரான வின்சென்ட் ஜார்ஜ் என்பவரால் ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் டெல்லி சாணக்யபுரியில் உள்ள பங்களாவுக்காக செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொலை ரூ.3.08 கோடி எனவும், கடைசியாக 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாடகை செலுத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் அலுவலகம், சோனியா காந்தியின் அதிகாரபூர்வ இல்லம் மற்றும் அவரது செயலாளரின் இந்த குடியிருப்பு உள்ளிட்ட மூன்று சொத்துகளுக்கான நிலுவையில் உள்ள வாடகை மற்றும் நிலுவைத் தொகையை செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad