அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2001 - 2006 வரை அதிமுக ஆட்சியில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, வருமானத்துக்கு அதிகமாக 4.9 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் அனைத்தும் அமலாக்கத் துறைக்கு சென்றது. அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. அவருடைய குடும்பத்தினர் 7 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணையும் நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பிறகு அமலாக்கத் துறையும் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்தது. இதற்கிடையே 14.5.2001 முதல் 31.03.2006 வரையிலான காலத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் வாங்கிய சொத்துகள், அவரது குடும்பத்தினர் வாங்கிய சொத்துகள் என சுமார் 6.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை பதிவு செய்துள்ளது. குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டதால் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரது அமைச்சர் பதவி விரைவில் பறிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு, தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது.
No comments:
Post a Comment