அரசு பள்ளிகளுக்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை உடனடியாக அகற்றி பள்ளிக்கு பாதுகாப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 554 இயங்கி வருகின்றன. இவற்றில் 52 லட்சத்து 75 ஆயிரத்து 203 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 2 லட்சத்து 25 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளிகளுக்கான இடங்கள், நிலங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றை அந்தந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சில இடங்களில் சமூக விரோதிகள் பள்ளிக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, தடுக்கவோ பள்ளித் தலைமை ஆசிரியர்களால் இயலாத நிலை நீடிக்கிறது. அதனால் அரசே நேரடியாக தலையிட்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இந்த புகார்களில் உள்ள உண்மைத்தன்மையை நன்கு உணர்ந்த பள்ளிக் கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தற்போது ஒரு அவசர கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், அரசுப் பள்ளிகளுக்கு சொந்தமான இடங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துகொண்டு மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளுக்கு இடையூறு செய்வதுடன், தலைமை ஆசிரியர்களை பணி செய்ய விடாமல் பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவித்து வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே அரசுப் பள்ளி இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை கண்டறிந்து, அதை அப்புறப்படுத்தி, பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment