10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்காக குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும்: பள்ளிகளுக்கு தேர்வுகள் இயக்குனர் உத்தரவு
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டதால், மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. கடந்த ஆண்டில் பொதுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா தொற்று நீடித்து வந்ததால், 2021ம் கல்வி ஆண்டிலும் உடனடியாக பள்ளிகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் தொற்று படிப்படியாக குறைய தொடங்கியதால் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால், காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. அதை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் சிரமம் இல்லாமல் தேர்வு எழுத வசதியாக 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பாடங்களை மட்டும் மாணவர்களுக்கு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்பேரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் தேர்வு குறித்து நடத்திய ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறும்போது, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும் பாடங்களில் இருந்துதான் பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவித்தார். மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. அதன் அடிப்படையில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 2021-22ம் கல்வி ஆண்டுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படியே பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் வழங்கப்படும். எனவே, குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி அனைத்து பள்ளிகளிலும் மே மாதம் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை மீண்டும் அனுப்பி வைத்துள்ளார். இந்த பாடத்திட்டங்களை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment