'நீட்' தேர்வு விலக்கு மசோதாவை, மத்திய அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்கக் கோரி, தமிழக கவர்னர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடித விபரம்:
'நீட்' விலக்கு மசோதா தொடர்பாக, சட்டசபையில் இரு முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை, ஜனாதிபதி ஒப்புதல் பெற மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது, மிகுந்த வேதனை அளிக்கிறது.சட்டசபையில் இரு முறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன்பின் நேரில் வலியுறுத்தியும், இந்நிகழ்வில் முன்னேற்றம் காணப்படவில்லை. இரண்டு மூத்த அமைச்சர்கள், தங்களை நேரில் சந்தித்து, இக்கோரிக்கையை வலியுறுத்தினர்.
அப்போது நீட் தேர்வு மசோதா, குறிப்பிட்ட காலத்துக்குள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற உறுதியான பதில் பெறப்படவில்லை.எனவே, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழக சட்டசபை மாண்பையும் கருத்தில் வைத்து, கவர்னர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொள்வது முறையாக இருக்காது.
தாங்கள் நீட் விலக்கு சட்ட மசோதாவை, அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு தாமதமின்றி, அனுப்பி வைக்க வேண்டும்.மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்பு சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும்போது, மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும். கவர்னருக்கும், மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமுகமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment