ஷில்லாங்: &'வடகிழக்கு மாநில பள்ளிகளில் ஹிந்தி கட்டாய பாடமாக கற்பிக்கப்படும்&' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதை, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வரவேற்றுள்ளார்.
வடகிழக்கு மாநில பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக்கும் முடிவை அம்மாநிலங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளதாக, சமீபத்தில் நடந்த பார்லி., அலுவல் மொழி கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதை, மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் அவர் கூறியதாவது:
வடகிழக்கு மாநில பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் அறிவிப்பை வரவேற்கிறேன்.இருப்பினும், மாநில மொழிகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹிந்தி, ஆங்கிலம் கற்பதன் பலனை நான் பெற்றுள்ளேன்.
எந்த ஒரு புதிய மொழியை கற்பதும் பாதிப்பை ஏற்படுத்தாது. சர்வதேச வேலை வாய்ப்புகளை பெற ஆங்கிலம் அவசியம். ஆனால், தேசிய அளவில் பார்க்கும்போது அதிகம் பேசப்படும் மொழியாக ஹிந்தி இருக்கிறது. எனவே, ஹிந்தி கற்பது நிச்சயம் அனைவருக்கும் பலன் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு
வடகிழக்கு மாநில பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக்கும் மத்திய அரசின் முடிவிற்கு, அம்மாநிலங்களின் மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு சமீபத்தில் அவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
அதன் விபரம்:
ஹிந்தியை பள்ளிகளில் விருப்ப பாடமாக அனுமதிக்கலாம். கட்டாய பாடமாக்கினால் பழமை வாய்ந்த மாநில மொழிகளின் வளர்ச்சியை தடுப்பதுடன் அவற்றை அழிக்கும். மத்திய அரசின் முடிவு, மக்களிடையே அச்சம் மற்றும் பிரிவினையை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment