சென்னையில் பெண் கவுன்சிலர்களின் உறவினர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கையை தாண்டி என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளில் பெண்கள் வெற்றி பெற்று பதவியேற்றுள்ளனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி நடவடிக்கைகளில் தலைவர்கள் ,துணை தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் உள்ள பெண்களின் கணவர்கள், உறவினர்கள் தலையீடு அதிகம் இருப்பதாக பரவலாக புகார்கள் குவிந்து வருகின்றன.
வார்டு பெண் கவுன்சிலரின் கணவர் மட்டுமல்லாது பெண் மேயரின் கணவரால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மக்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. மேயரை நேரில் சந்தித்து வார்டு பிரச்சினை குறித்து தங்களுடைய கோரிக்கை மனுவை கொடுக்கச் சென்றால் மேயர் அறையில் மேயரின் கணவர் எப்போதும் இருப்பதாகவும் கொடுத்த மனுவை மேயர் வாங்காமல் மேயரின் கணவரே வாங்கி கொள்கிறார் எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
சென்னையிலும் பெண் உறுப்பினர்களின் கணவன்கள் மற்றும் உறவினர்கள் நிர்வாகத்தை கவனிப்பதாகவும், போலீசாரிடம் அவதூறாக நடந்துகொள்வதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து சென்னை மேயர் பிரியா ராஜன் எச்சரிக்கை செய்திருந்தார். அதாவது, கவுன்சிலர்கள் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டு உள்ளதோ அவர்கள் தான் அந்த பணியை செய்ய வேண்டும். அதையும் மீறி, எவரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்களின் மீது தலைமை கடும் நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், அப்படி எதுவும் நடவடிக்கை எடுக்காமல் போலீசாரை அசிங்கமாக பேசி ரகளையில் ஈடுபட்ட பெண் கவுன்சிலரின் கணவனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள சம்பவம் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ராயபுரம் பகுதியின் 51 வது வார்டில் போட்டியிட்டு வென்ற திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசாரை மிரட்டியதும், நான்தான் கவுன்சிலர் என்று போலீசிடம் பொய் கூறி தெனாவட்டாக பேசிய வீடியோ வெளியாகி ஓட்டு போட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி ஜனநாயகத்தை கேள்வி குறியாக்கும் கயவர்களை தற்காலிகமாக மட்டும் கட்சி நீக்கியுள்ள நடவடிக்கை மேயர் பிரியா ராஜனின் எச்சரிக்கைக்கு அர்த்தம் இல்லாமல் போயிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் குற்ற சம்பவங்களின் ஈடுபடும் உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச தண்டனையே இடமாற்றம் என்றும் விமர்சிக்கப்படுகிறது
No comments:
Post a Comment