ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி - மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவக்கம்...
பள்ளி பணிகளில் இருந்து ஆசிரியர்கள் விடுமுறை கேட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான முதல் உத்தரவை, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரிப்பால், பிளஸ் 2 பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு மாணவர்கள் வராததால், தங்களுக்கு விடுமுறை அளிக்கும்படி, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட உள்ளதாக, இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.
இதுபற்றி, தமிழக தலைமை செயலர், சுகாதார செயலர், பள்ளி கல்வி செயலர் ஆகியோர் ஆலோசனை நடத்தி, பள்ளி பணியில்லாமல் விடுமுறை கேட்கும் ஆசிரியர்களுக்கு, கொரோனா தடுப்பு பணி வழங்க அனுமதித்தனர். இதன்படி, முதல் கட்டமாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 24 ஆசிரியர்களுக்கு கொரானா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவில், '24 ஆசிரியர்கள், துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கொரோனா தடுப்புக்கான, 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில், தினமும் ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டும்' என, கூறியுள்ளார். இதேபோல, மற்ற மாவட்டங்களிலும், பல்வேறு வகையான கொரோனா தடுப்பு பணிகளில், ஆசிரியர்களை பணியமர்த்த, நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. விரைவில், அதற்கான உத்தரவுகள், மாவட்ட கலெக்டர்களால் பிறப்பிக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment