ரூ.2000 அடுத்த தவணை எப்போது: தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

ரூ.2000 அடுத்த தவணை எப்போது: தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்!

ரூ.2000 அடுத்த தவணை எப்போது: தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்!



தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், பதவியேற்றவுடன் முதல் கையெழுத்தாக, 2.07 கோடி அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனா நிவாரண நிதி தலா ரூ.4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இதற்காக 4,153.39 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக ரூ.2,000 நிவாரணத் தொகை இம்மாதமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இத்திட்டத்தை ஸ்டாலின் கடந்த 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். இதையடுத்து, பொது மக்களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு, கடந்த 15ஆம் தேதி முதல் பொது மக்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டு வந்தது. மேலும், இரண்டாவது தவணையான அடுத்த ரூ.2000 எப்போது வழங்கப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்ய சேலம், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வை முடித்து திருச்சியில் இருந்து இன்று சென்னை திரும்பும் ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி பிறந்த நாளுக்கு முன்பாக கொரோனா நிவாரணத்தின் 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதன் மூலம் அடுத்த மாதம் 3ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் பேசிய ஸ்டாலின், “கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. சென்னையை போன்று பிற மாவட்டங்களில் வார் ரூம் அமைக்க யோசித்து வருகிறோம். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றை தமிழகத்திலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், வாழ்த்து தெரிவிக்க வந்த அதிகாரிகளிடமும் கொரோனா தடுப்பு குறித்தே விவாதித்தேன். மே 2ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியமைத்து 2 வாரங்களில் 16,938 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா இல்லை என்று சொல்லும் நாளே நமக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்.

ஊரடங்கு மூலம் தொற்று பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், ஊரடங்கை நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றார். மேலும், அரசு ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாகக் குறைப்பது குறித்து அரசு பரிசீலிக்கிறது என்பது வதந்தி. பிளஸ்2 தேர்வு குறித்து துறையுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad