தீவிர ஊரடங்கு இன்னும் எத்தனை வாரம்? முதல்வர் நடத்தும் ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

தீவிர ஊரடங்கு இன்னும் எத்தனை வாரம்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!

தீவிர ஊரடங்கு இன்னும் எத்தனை வாரம்? முதல்வர் நடத்தும் ஆலோசனை!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதற்கு முன் இரு வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோதும் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனைக்காக கடைகள் 6 மணி முதல் 10 மணி வரை திறந்துவைக்கப்பட்டிருந்தன. ஆனால் இதை பயன்படுத்தி பலர் ஊரடங்கு விதிகளை மீறி சாலைகளில் சுற்றித்திரிவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் காய்கறிக்கடைகள், இறைச்சி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதைத் தடுக்கவே ஒரு வாரம் தளர்வுகளற்ற தீவிர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறந்துவைக்கப்பட்டன. பேருந்துகளும் இயக்கப்பட்டன.

இந்த தளர்வை பயன்படுத்தி துணிக்கடைகள், நகைக்கடைகளில்கூட மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். இதனால் ஊரடங்கால் பலன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் உருவாகியது.

ஆனால் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழகத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு பரவலாக குறைந்து வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது

தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என கூறினார்.
இந்நிலையில் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் பாதிப்பு விவரங்கள் எப்படி உள்ளன, தளர்வுகளை அறிவித்தால் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதா, ஊரடங்கை நீட்டிப்பு செய்ய வேண்டுமானால் இன்னும் எத்தனை நாள்களுக்கு செய்ய முடியும் என பல்வேறு கோணங்களில் ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தமிழக அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கோட்டை வட்டாரத்தில் விசாரிக்கும் போது, பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேசமயம் பெரியளவில் இறக்கத்தை சந்திக்கவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தால் மீண்டும் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டலாம், எனவே ஊரடங்கைத் தொடரவே வாய்ப்புகள் உள்ளன. கடந்த முறையே இரு வாரங்களுக்கு ஊரடங்கு விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

முதல் ஒரு வார நிலைமையை கணக்கில் கொண்டு அடுத்த வார அறிவிப்பை பின்னர் அறிவிக்கலாம் என அரசு முடிவு செய்தது. தற்போது இதற்கு பலன் இருக்கும் நிலையில் இதை தொடர்ந்தால் மட்டுமே பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள். எனவே மீண்டும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளற்ற தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad