தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 5, 2021

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!


12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்கள் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத் தேர்வுகள் தொடர்பாக பல தரப்பினரையும் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒன்றிய அரசு ஏற்கெனவே சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகளை இந்த ஆண்டுக்கு ரத்து செய்துள்ளது. பல்வேறு மாநிலங்களுக் இதே காரணத்துக்காக 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளன. தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து பல தரப்பினருடன் ஆலோசனை நடத்தியதில், அனைத்து தரப்பினரும் மாணவர் நலன் பாதுகாக்க வேண்டுமென உறுதியாக உள்ளனர்.



கொரோனா இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாவது அலையும் வர வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள விதிகளின்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தடுப்பூசி செலுத்த இயலும் என்பதால், அவ்வயதுக்கு குறைவான தடுப்பூசி போடப்படாத மாணவர்களை தேர்வு எழுத ஒரே நேரத்தில் வரச்செய்வது தொற்றை அதிகரிக்க செய்யலாம் என வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாநில கல்வி திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டுமே உயர்கல்வி வாய்ப்புகளுக்கான தகுதியாக கருதப்பட வேண்டுமென்ற கொள்கையில் இந்த அரசு உறுதியாக இருப்பினும், தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனதளவில் பாதிக்கும் என மருத்துவர்கள் கருதுவதால், பல தரப்பினர் வழங்கிய ஆலோசனைப்படி

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.

மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதை முடிவு செய்ய பள்ளிக் கல்வி துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர்கல்வி துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என ஆலோசித்து இக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு மதிப்பெண் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்களை கொண்டு மட்டுமே தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும்.

பெருந்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவு தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.



கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் உடல் நலன், மன நலன் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதிசெய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad