ஜூன் 18ல் மருத்துவர்கள் போராட்டம் - காரணம் இது தான்!
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து வரும் 18ம் தேதி நாடு முழுவதும் போராட்டம் நடத்த இந்திய மருத்துவ சங்கம் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜெயலால் காணொலி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் மருத்துவர்கள் மீது தேவையற்ற தாக்குதல்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
அசாம், பீகார், மேற்கு வங்கம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களில் மருத்துவர்களுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தடுக்கும் வகையில் மருத்துவமனைகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.
மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில், வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் முகக்கவசங்கள் அணிந்து, ரிப்பன் அணிந்து, சட்டைகளில் கருப்பு பேட்ஜ்கள் அணிந்து, வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். இந்தப் போராட்டத்தின் போது, மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கும். நோயாளிகளுக்கு சிகிச்சை தங்கு தடையின்றி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி, நாடு முழுவதும் 719 மருத்துவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment