ஒரே நாடு ஒரே ரேஷன்: எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை - முதல்வர் மம்தா
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டின் எந்த இடத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
பல்வேறு மாநிலங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், இந்த திட்டத்தை அம்மாநில முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அமல்படுத்தவில்லை. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறி திட்டத்தை அமல்படுத்தாமல் அவர் கிடப்பில் போட்டார்.
இந்நிலையில், அண்மையில், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னை குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கானது என்றும், எந்தவித காரணமும் சொல்லாமல், இத்திட்டத்தை மேற்கு வங்க மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தவிட்டனர்.
இந்நிலையில், மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் மாநில அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்றார்.
No comments:
Post a Comment