சசிகலா ஆடியோவும், ஈபிஎஸ் சந்திப்பும்; அனல்பறக்கும் அதிமுக!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். திடீரென சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தினார். அதிலிருந்தே ஓபிஎஸ்சின் அரசியல் களம் இறங்குமுகமாகத் தான் இருக்கிறது. பின்னர் சசிகலா தயவால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து நின்றன. ஒருவழியாக இரு அணிகளும் கைகோர்த்து கரங்கள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்றே கூறப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சி முழுவதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையிலான அதிகார மோதல் தொடர்ந்தது. சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே மீண்டுமொரு மோதல் வெடித்தது. அதில் ஈபிஎஸ்சின் கை ஓங்கியதால் ஓபிஎஸ் பின் வாங்கிக் கொண்டார். இதையடுத்து ஆளுக்கொரு அறிக்கை, கடிதம் என தனித்தனியே அரசியல் செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக அதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக கூறப்படும் ஆடியோ அடுத்தடுத்து வெளியாகி அக்கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவை கைப்பற்றி தலைமை பொறுப்பேற்கும் முயற்சியில் சசிகலா ஈடுபடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வமும் ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சசிகலா உடன் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சுமார் ஒரு மணி நேரம் பேசும் ஆடியோ எந்நேரமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இது அதிமுகவிற்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். அப்போது சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களும் சென்றுள்ளனர். சென்னையில் தங்கியிருந்தும் கட்சி அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வரவில்லை. இது இருவருக்கும் இடையிலான மோதலின் வெளிப்பாடே என்று குரல்கள் எழத் தொடங்கின. இந்த விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஓபிஎஸ் வீட்டு கிரகப்பிரவேசம் நடக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று கூறி ஈபிஎஸ் சமாளித்தார்.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நேற்று எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்த சந்திப்பில் மாவட்ட செயலாளர்களை சந்தித்தது, சசிகலா ஆடியோ வெளியான விவகாரம் ஆகியவை பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடனிருந்தார். தங்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த சந்திப்பு நடந்திருப்பதாக அதிமுக வட்டாரம் கூறுகிறது.
No comments:
Post a Comment