கோவா இளசுகளிடையே ட்ரண்டாகும் பிடிஆர்: ஒன்றிய அரசுக்கு புதிய உதறல்!
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அவரது நடவடிக்கைகள் பாராட்டுகளை பெற்று வருகின்றன. குறிப்பாக, உயர் அதிகாரிகள் தேர்வு, அமைச்சரவை சகாக்கள் தேர்வில் அவர் காட்டிய அணுகுமுறை வெகுவாக வரவேற்கப்படுகிறது. அதிலும், முக்கியமான நிதியமைச்சர் பொறுப்பை சர்வதேச அளவில் நிதித்துறையில் அனுபவம் பெற்றிருக்கும் பழனிவேல் தியாகராஜனுக்கு அவர் ஒதுக்கியுள்ளார்.
ஆனால், ஆரம்பம் முதலே பழனிவேல் தியாகராஜன் பாஜக, ஒத்த சிந்தனையுடையவர்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இதனிடையே, ஒன்றிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பழனிவேல் தியாகராஜன், மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு என்று கூறி மாநிலங்களுக்கான உரிமைகள் பற்றி விரிவாக பேசினார். அவரது பேச்சு அனைத்து மாநிலங்களுக்குமான இருந்தது.
இதன் பின்னர் அவர் கூடுதல் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். ஆனாலும், அசாரமல் பலவற்றை இடது கையால் கையாண்டும் வருகிறார் பிடிஆர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பின்னர், வானதி சீனிவாசனுடன் வார்த்தை போர், கோவா அமைச்சருடன் மல்லுக்கட்டு என அவர் பதிலளித்த விதங்கள் பாஜகவினரால் விமர்சிக்கப்பட்டாலும், மற்றவர்களிடம் பாராட்டுகளை பெற்றுத் தந்துள்ளது.
இதுகுறித்து உளவியல் நிபுணர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, அவரிடம் பகட்டு இல்லை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று அவர் பேசுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார் என்கின்றனர். மனித வளத்துறைக்கு அமைச்ச்சராக இருக்கும், அந்த துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்றுள்ள பழனிவேல் தியாகராஜன், ஒன்றியம் தன்னை சீண்டிப்பார்க்கிறது என்ற உளவியலும், புரிதலும் இல்லாதவர் அல்ல என்று கூறும் அவர்கள், “வானதியை ஒரு congenital liar என்று சொல்லி பதில் அளிப்பதின் மூலம் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக அதே சிந்தனையில் இருப்பவர்களை விமர்சித்துள்ளார்” என்று அதனுடைய ஆழத்தை சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும், “கோவா மாநிலத்துக்கு ஜிஎஸ்டி கூட்டத்தில் இழுக்கை ஏற்படுத்திவிட்டது போல் அம்மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கோடின்கோ பிடிஆர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எகிறினார். கோவாவின் மாநில உரிமைக்காகவும் தான் பேசுகிறேன் என்று பிடிஆர் அளித்த பதில் மூலம் அம்மாநில இளைஞர்களிடையே அவர் தற்போது ட்ரண்டாகி வருகிறார்” என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்
ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் மாநில நிதி நிர்வாகம் இருக்கும் வரை மாநிலங்கள் நிச்சயம் தனித்து முன்னேற முடியாது. எங்கள் நிதிநிர்வாகத்தை ஒன்றிய கட்டுபாட்டில் இருந்து விடுவியுங்கள் என்று பிடிஆர் எழுப்பும் குரல் குறித்து சாமானிய மக்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த இந்த விவகாரத்தை நீண்ட நாட்களுக்கு பின்னர் பிடிஆர் எழுப்பியுள்ளார்.
அவரது குரல் பஞ்சாப், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் ஒலிக்க தொடங்கியுள்ளன. இது ஒன்றிய அரசுக்கு புதிய உதறலை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. ஆகவே தான் நிதியமைச்சர் அதிகம் விமர்சிக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment