காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? விவரங்களை நாளைக்குள் அனுப்ப உத்தரவு...
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கல்வி என்பது மாணவர்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. மேலும் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு மற்றும் இறந்தவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
அதற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காலிப்பணியிடங்கள் விவரங்களை நாளைக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்து பாடங்கள் மற்றும் உடற்கல்வி நிலை-2 காலிப்பணியிட விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாக கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் நாளைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க வேண்டும். அதன் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்’’ என்றனர்.
No comments:
Post a Comment