தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம் இதோ!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மே மாதம் உச்சத்தை அடைந்தது. குறிப்பாக மே 21ஆம் தேதி 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதன்பிறகு பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,016 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 25,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 267 பேர் பலியாகி இருக்கின்றனர்.
தற்போது 1,49,927 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய்ப்பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஊரடங்கை தளர்த்தி மாநில அரசு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜூன் 14) காலை முதல் 6 மணி முதல் வரும் 21ஆம் தேதி காலை 6 மணி வரை பல்வேறு புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு விதமான கட்டுப்பாடும், எஞ்சிய 27 மாவட்டங்களில் வேறு விதமான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பொதுவான விஷயம் என்னவென்றால் அனைத்து கடைகள், தொழிற்சாலைகளில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது, சுற்றுலா தலங்களுக்கு நீடிக்கும் தடை, நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய பகுதிகளுக்கு அவசர தேவைகளுக்காக செல்வோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ-பதிவு பெறுவது அவசியம்.
நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எந்தவொரு செயல்பாடுகளுக்கும் அனுமதியில்லை. அனைத்து மாவட்டங்களிலும் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளாக, மருந்து கடைகள் திறக்க அனுமதி, பால், குடிநீர், தினசரி பத்திரிகைகள் விற்பனை, தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் மொத்த விற்பனை கூடங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
சாலையோர காய்கறி, பூ, பழம் விற்பனை கடைகளும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிக்கப்படும். காய்கறி, பழங்கள் வாகனங்களில் விற்பனை செய்வது தொடரும். வீடுகளுக்கே சென்று மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ரேஷன் கடைகள், பெட்ரோல், டீசல் பங்குகள், எல்.பி.ஜி விநியோகத்திற்கு அனுமதி.
ஓட்டல்கள், உணவகங்களில் காலை 6 மணி முதல் 10, நண்பகல் 12 மணி முதல் 3, மாலை 6 மணி முதல் 9 என பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. இ-வர்த்தக சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ரயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் சார்ந்த சேவைகள், செயல்பாடுகளுக்கு அனுமதி. மின்சாரம், குடிநீர் விநியோகம், துப்புரம், தொலைத்தொடர்பு, தபால் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி.
பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா செயல்படலாம். துணை பதிவாளர் அலுவலகங்களில் நாள்தோறும் 50 டோக்கன்கள் மட்டும் வழங்கி பத்திரப்பதிவு செய்யலாம். வங்கிகள் மூன்றில் ஒருபங்கு ஊழியர்களுடன் இயங்கலாம். மாநிலங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் மருத்துவ அவசரம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு மட்டும் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.
மாவட்டத்திற்குள் மருத்துவ அவசரம் மற்றும் இறுதிச் சடங்குகள் இ-பதிவின்றி அனுமதிக்கப்படும். தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளாக, பூங்காக்கள், அழகு நிலையங்கள், சலூன்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவர் சேர்க்கை பணிகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்கும் கடைகள், ஹார்டுவேர் கடைகள், பாடப்புத்தகங்கள் சார்ந்த கடைகள், டாஸ்மாக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை, டீக்கடைகள், இனிப்பு மற்றும் கார வகை கடைகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment