மத்திய அரசுக்கு செக் வைக்கும் தமிழக அரசு; முழு மூச்சா ரெடியான முதல்வர்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்க் கொடியைக் கையில் ஏந்தி 14 வயதிலேயே தாய்மொழி காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் மொழி - இனப் போராட்ட வரலாற்றின் இன்றியமையாத சாதனைகளில் ஒன்று, நம் தமிழ் மொழிக்கு இந்திய ஒன்றிய அரசின் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்ததாகும்.
பரிதிமாற்கலைஞரில் தொடங்கி பல தமிழறிஞர்களும் 100 ஆண்டுகாலமாக வலியுறுத்திய செம்மொழித் தகுதி, முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதி அவர்களின் பெருமுயற்சியால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கூட்டணியின் தலைவராக இருந்த சோனியா காந்தி அவர்களும், பிரதமர் பொறுப்பு வகித்த மன்மோகன் சிங் அவர்களும்,
தலைவர் கலைஞர் அவர்களின் கோரிக்கையை ஏற்றனர். தமிழுக்கு செம்மொழித் தகுதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு 6-6-2004 அன்று வெளியானது. அதற்கான அரசாணை 12-10-2004 அன்று வெளியிடப்பட்டது. உலகின் மூத்த மொழியும், திராவிட மொழிக் குடும்பத்தின் தாயாக விளங்கும் மொழியும்,
இலக்கிய - இலக்கண வளங்கள் கொண்ட சிறப்பான மொழியும், பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் தன்னைத் தகவமைத்துக் கொண்டு, கல்வெட்டுக் காலம் முதல் கணினிக் காலம் வரை சிறப்புற்று விளங்கும் மொழியான அன்னைத் தமிழ்மொழிக்கு முத்தமிழறிஞர் சூட்டிய அணிகலனே, செம்மொழித் தகுதியாகும்.
அந்தத் தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க, திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும். நமது அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment