தமிழகத்தில் தேநீர், சலூன் கடைகள் திறப்பு; வெளியாகிறதா சூப்பர் அறிவிப்பு?
தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி காலை 6 மணி முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி, பழக் கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் பேருந்து போக்குவரத்து, தேநீர் கடைகள், சலூன் கடைகள், டாஸ்மாக் ஆகியவற்றிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து மக்களை பாதுகாக்க வரும் ஜூன் 7ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்று தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தளர்வுகளில் மளிகை, காய்கறி, பழங்கள், மீன், இறைச்சி (மொத்த விற்பனை), பூ, காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் மற்றும் ஹார்டுவேர், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் பழுது பார்க்கும் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இ-பதிவு அனுமதியுடன் ஆட்டோக்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேநீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி மறுத்திருப்பது ‘ஒரு கண்ணில் வெண்ணை மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு’ என்ற நிலைபாட்டில் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகின்றது. எனவே இவர்களின் வாழ்வாதாரத்தையும் கவனத்தில் கொண்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தேநீர், சலூன் கடைகளை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை திறக்க அனுமதியளித்து தேநீர், சலூன் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும். இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment