ரூ.4,108 கோடி அபராதம்: விடுவிக்கப்பட்ட எவர்கிவன் கப்பல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

ரூ.4,108 கோடி அபராதம்: விடுவிக்கப்பட்ட எவர்கிவன் கப்பல்!

ரூ.4,108 கோடி அபராதம்: விடுவிக்கப்பட்ட எவர்கிவன் கப்பல்!


உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்று எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாக உலக வா்த்தகத்தின் 12 சதவீதம் நடைபெற்று வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 15,000 கப்பல்கள் இந்த சூயஸ் கால்வாயை கடந்து செல்வதால் பரபரப்பாக இயங்கும் கடல் பாதையாகவும் இது உள்ளது.
இதனிடையே, சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த எவர் கிவ்வன் எனும் சரக்குக் கப்பல், இந்த சூயஸ் கால்வாயை கடந்த போது குறுக்கே திரும்பி சிக்கிக் கொண்டது. இந்த கப்பலானது சூறாவளிக் காற்றால் கால்வாயின் குறுக்காக மணலில் மாட்டிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த கால்வாயை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து நின்றதால், வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. கப்பலின் உரிமையாளரான ஜப்பானின் ஷோயேய் கிசேன், சா்வதேச வா்த்தகத்துக்கு இழப்பை ஏற்படுத்திய இந்த விபத்துக்கு மன்னிப்பு கோரினார். தொடர்ந்து, ஒரு வாரகாலத்துக்கும் மேலாக இரவு பகல் பாராமல் நடைபெற்ற மீட்பு பணியில் மூலம் அந்த கப்பல் மீட்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும். கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் 99 சதவீதம் பேர் எகிப்தியர்கள் என்றும் சூயஸ் கால்வாய் ஆணைய தலைவர் ஒசாமா ராபி தெரிவித்திருந்தார்.இதனிடையே, எவர் கிவன் கப்பலால் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட சேதம், வருவாய் இழப்பு போன்றவற்றுக்காக ரூ.7,500 கோடி நஷ்டஈடு வழங்கினால் மட்டுமே கப்பலை விடுவிக்க முடியும் என்று எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சூயஸ் கால்வாயின் அருகில் உள்ள கிரேட் பிட்டர் ஏரியில் அந்த கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு சிறை பிடிக்கப்பட்டது. கப்பலின் உரிமையாளர் எவ்வளவோ கேட்டும் பணத்தை கொடுத்தால்தான் கப்பல் நகரும் என்றும் சூயஸ் கால்வாய் கறாராக தெரிவித்து விட்டது.இதையடுத்து, மிக அதிகப்படியான தொகையைக் கேட்கிறது என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் மீது கப்பலின் உரிமையாளர் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, இரண்டு நிர்வாகத்தினருக்கும் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியில் இழப்பீட்டு தொகையை ரூ.4,108 கோடியாக சூயஸ் கால்வாய் குறைத்துக் கொண்டது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில், சிறை வைக்கப்பட்ட எவர் கிவ்வன் கப்பல் இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டு மீட்கப்பட்டது. தொடர்ந்து, அக்கப்பல் நெதர்லாந்து நோக்கி தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad