ராஜ்யசபாவில் களேபரம்! ஒன்றிய அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை கிழித்தெறிந்த எம்.பி., - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

ராஜ்யசபாவில் களேபரம்! ஒன்றிய அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை கிழித்தெறிந்த எம்.பி.,

ராஜ்யசபாவில் களேபரம்! ஒன்றிய அமைச்சரின் கையிலிருந்த அறிக்கையை கிழித்தெறிந்த எம்.பி.,

பெகாசஸ் உளவு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், மாநிலங்களவையில், ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசும்போது, அவரது கையிலிருந்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., சாந்தனு சென் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள் இரவு, இந்தியாவில் இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென் பொருள் மூலம் 40-க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், பத்திரிகையாளர்கள் உட்பட பலரது மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த பிரச்னையை, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். மக்களவையில் இது குறித்து விளக்கமளித்த ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் உளவு பார்ப்பது என்பது சாத்தியமில்லாதது என்றும், இதில் துளியும் உண்மையில்லை என்றும் தெரிவித்தார்.

உளவு பார்க்கவில்லை எனத் தெரிவித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்யே பெகாசஸ் மென் பொருள் உளவு பார்த்தது அம்பலமானது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் அனுமதி இல்லாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று, வழக்கம் போல் நாடாளுமன்ற மாநிலங்களவை கூடியது. அப்போது பெகாசஸ் உளவு விவகாரத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். இருக்கையை விட்டு வெளியே வந்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடுவை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

கடும் கூச்சல் குழப்பங்களுக்கு இடையே, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து, ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தார். அப்போது, அவரது கையிலிருந்த அறிக்கையை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி., சாந்தனு சென் பிடுங்கி கிழித்தெறிந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட மாநிலங்களவை, பிறகு நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad