எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க., கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 22, 2021

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க., கண்டனம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு - ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க., கண்டனம்!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல் துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க., அரசுக்கு அ.தி.மு.க., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன் மூலம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருக்கின்ற ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளர்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அ.தி.மு.க.,வுக்கு பொதுமக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் வகையில் காவல் துறையை முடுக்கிவிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அமைச்சர்கள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் இருந்து நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கியிருக்கும் தி.மு.க. அமைச்சர்கள், அதனை திசை திருப்புவதற்காக, வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யான குற்றச்சாட்டுக்களை புனையும் நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றத் திறானியில்லாமல் ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் குறுகிய காலத்திலேயே மக்களுடைய அதிருப்தியை பெற்றிருக்கிற தி.மு.க. அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது.

அ.தி.மு.க.,வை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும் என்ற வரலாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்குத் தெரியும். அ.தி.மு.க., இது போன்ற அடக்குமுறைகளை எல்லாம் தாங்கி வலுப் பெற்ற இயக்கம் என்பதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போன்றவர் அறிவர்.

எனவே, காழ்ப்புணர்ச்சியோடு காவல் துறை மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது காவல் துறையை ஏவி விட்டு அவரது இல்லத்தில் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்த நினைக்கும் தி.மு.க. அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கட்சி உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டாலின் அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டர்களின் துணையோடு, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்வோம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad