தேனி டூ விருதுநகர் காட்டு வழிப் பயணம்: கரடி அடித்து உயிருக்குப் போராடும் நபர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 9, 2021

தேனி டூ விருதுநகர் காட்டு வழிப் பயணம்: கரடி அடித்து உயிருக்குப் போராடும் நபர்!

தேனி டூ விருதுநகர் காட்டு வழிப் பயணம்: கரடி அடித்து உயிருக்குப் போராடும் நபர்!
மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களான தேனி, விருதுநகர் மாவட்டங்களை இணைக்கும் மலைப்பாதையாகக் கிழவன் கோயில் மலைப்பாதை உள்ளது. இந்தப் பாதையினை சீர்செய்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என இரண்டு மாவட்ட மக்களும் நீண்ட காலமாகக் கோரிக்கை ஒன்றை முன் வைத்து வருகின்றனர்.
இச்சாலை மூலம், தேனியிலிருந்து மதுரை மாவட்டத்திற்குச் செல்லாமல், விரைவாக விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு செல்ல முடியும். சாலை இல்லாமல் இம்மலைப்பாதையினை சிலர் பயன்படுத்தி வருகின்றனர். நடந்து மட்டுமே செல்லக்கூடிய இந்த அடர் மலைப்பாதையில் நேற்று இரவு நபர் ஒருவரைக் கரடி தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கிழவன் கோவில் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செல்வம்(39). தேனி மாவட்டம் வருசநாடு, பாலசுப்பிரமணியபுரம் பகுதியில் வசித்து வந்த செல்வத்தின் தந்தை பாண்டி, சில தினங்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால், அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள, கிழவன் கோயில் மலைப்பாதை வழியாகச் செல்வம் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஊர் சென்று தந்தையின் இறுதிச் சடங்கை முடித்து விட்டு மீண்டும் மலைப்பாதை வழியாகக் கிழவன் கோயில் பகுதிக்கு நேற்றிரவு நடந்து சென்றுள்ளார் செல்வம். அப்போது வனப்பகுதியிலிருந்து திடீரென வந்த கரடி செல்வத்தைச் சரமாரியாகத் தாக்கியது. அதில், நிலை குலைந்த செல்வம் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

உதவிக்கு யாரும் வராத நிலையில், இரவு முழுவதும் வனப்பகுதியில் உயிருக்குப் போராடிய நிலையிலிருந்துள்ளார். இதனையடுத்து அந்த வழியாக வந்த சிலர், மயங்கிய நிலையில் கிடந்த செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வருசநாடு வனத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.வனப்பகுதியில் நடந்த சென்றவரைக் கரடி தாக்கிய சம்பவம் தேனி, விருதுநகர் மாவட்ட எல்லையில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad