தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; முன்வருமா மத்திய அரசு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, August 23, 2021

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; முன்வருமா மத்திய அரசு?

தேசிய அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு; முன்வருமா மத்திய அரசு?

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா கல்வி மற்றும் சமூக அடிப்படையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நாடு என்ற அடிப்படையில், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களை முன்னேற்றுவதற்காக இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நிகர்நோக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன. அதற்கான உரிமைதாரர்களின் அளவை தீர்மானிப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான் மிகவும் சரியான நடவடிக்கை என்ற நிலையில், அதை மேற்கொள்ள தாமதிப்பது நியாயமல்ல. இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

90 ஆண்டுகளாக காத்திருப்பு

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான தேவையை உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களும் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தியுள்ளன. ஆனால், ஆங்கிலேயர் ஆட்சியில் 1931ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பிறகு கடந்த 90 ஆண்டுகளாக இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் போதிலும் அது இன்று வரையில் நனவாகாத கனவாகவே தொடர்வது வருத்தமளிக்கிறது.

கொரோனா நெருக்கடி

இந்தியாவில் கடந்த இரு பத்தாண்டுகளாக கைநழுவிப் போன சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை இம்முறையும் கைவிட்டு விடக் கூடாது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஏற்கனவே தாமதமாகி விட்ட நிலையில், அதற்கான கட்டமைப்புகளில் சாதிவாரியாக மக்கள்தொகையை கணக்கெடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து, அதனடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

முதல்வர் வலியுறுத்த வேண்டும்

இதை செய்வது கடினமான ஒன்றல்ல. மத்திய அரசு நினைத்தால் சாத்தியமாகும். மராத்தா இட ஒதுக்கீட்டு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்று ஆணையிட்டது. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை களையும் வகையில், அண்மையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மத்திய அரசு திருத்தியது.

அதேபோல், சாதிவாரி மக்கள்தொகையையும் கணக்கெடுக்க வேண்டும். பிகார் மாநில முதல்வரைப் போலவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அனைத்துக் கட்சித் தலைவர்களை தில்லிக்கு அழைத்துச் சென்று சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad