குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்! - பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தேர்வு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்! - பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தேர்வு!

குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்! - பா.ஜ.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் தேர்வு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பா.ஜ.க., - எம்.எல்.ஏ., பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.


குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி, டெல்லி பா.ஜ.க., மேலிடம் அறிவுறுத்தலின்படி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, மாநில ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத்தை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்தது, மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது.

ராஜினாமா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ரூபானி, தனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார். புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க., தேசியத் தலைமையின் கீழ் கட்சிப் பணியை தொடருவேன் என, தெரிவித்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில், புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக, பா.ஜ.க., தலைமை கழக அலுவலகத்தில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம், மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், குஜராத் மாநில சட்டப்பேரவை பா.ஜ.க., குழுத் தலைவராக எம்.எல்.ஏ., பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். இதன்படி, குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, விரைவில், பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார். இன்று மாலை அல்லது நாளை, ஆளுநர் ஆச்சாரியா தேவ் ரத்தை நேரில் சந்தித்து, ஆட்சி அமைக்க பூபேந்திர படேல் உரிமைக் கோர உள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad