பஞ்சாப் அரசியலை அதிர வைக்கும் சித்து; அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா!
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அவமானப்பட்டதால் பதவியை ராஜினாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவருக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்குக்கு கடந்த ஜூலை மாதம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அம்மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து பிரச்சினைக்கு காங்கிரஸ் மேலிடம் முற்றுப்புள்ளி வைத்த நிலையில், அமரீந்தர் சிங்கின் ராஜினாமா பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே, சித்து மிகவும் ஆபத்தானவர் என்றும், அவரை தேர்தலில் தோற்கடிப்பேன் என்றும் அமரீந்தர் சிங் சூளுரைத்து வந்தார். இந்த நிலையில், யாரும் எதிர்பாரா விதமாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து திடீரென ராஜினாமா செய்தார். “பஞ்சாப் மாநில நலனில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது. தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும், தொண்டராக கட்சியில் தொடர்வேன்” என்று அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.சித்து ராஜினாமா செய்ததால் பஞ்சாப் அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளதன் தொடர்சியாக, பஞ்சாப் பெண் அமைச்சர் ரஸியா சுல்தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். “பஞ்சாப் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர் சித்து. அவருக்கு ஆதரவளித்து எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் யோகிந்தர் திங்ராவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொண்டராக கட்சியில் தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment