உலக சுற்றுலா தினம்: தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் - டூர் போகும் நெட்டிசன்கள்!
சமூக வலைதள ஆர்வலர்கள் மூலம் தமிழகத்தில் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியில் தமிழக சுற்றுலாத்துறை இறங்கியுள்ளது. அந்த வகையில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் தமிழ்நாட்டை கண்டு மகிழ்வோம் (Discover Tamilnadu) என்ற நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடக்கி வைத்தார்.
இதன் மூலம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு சமூக ஊடகவியலாளர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதற்கான வாகனத்தை அமைச்சர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலா துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், சமூக வலைதளங்களில் சுற்றுலா துறையில் ஆர்வமுள்ள 10 பேர் கொண்ட குழு, தமிழகம் முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களுக்கு சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிரவுள்ளதாக தெரிவித்தார்.
இன்று முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை இந்த குழு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கூறிய அமைச்சர், மக்கள் அறியாத சுற்றுலாத் தலங்களை வெளிக்கொண்டு வரும் முயற்சியே இந்த பயணத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
No comments:
Post a Comment