அன்றும் இன்றும் கூடவே வருகிறான் பாரதி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

அன்றும் இன்றும் கூடவே வருகிறான் பாரதி

அன்றும் இன்றும் கூடவே வருகிறான் பாரதி

பாரதி பற்றி யோசிக்கிறபோது முதலில் ஏற்படுகிற சிந்தனை, மாறும் யுகத்தின் இணைப்புக் கண்ணியாக இருந்தான் என்பதுதான். அன்று கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தியே புதிது புதிதாய்த் தேடித் தெரிந்துகொண்டவன், புதுக்கவிதை எனப் பின்னாளில் அடையாளம் பெற்ற வடிவத்தை வசனகவிதையாக அறிமுகப்படுத்தியவன், இந்திய இதழியல் உலகத்தில் முதன் முதலாக அரசியல் கருததுப்படம் (கார்ட்டூன்) தானே வரைந்து வெளியிட்டவன், விடுதலை லட்சியப் பாடல்கள் மக்களைக் கிளர்ச்சியடையச் செய்கின்றன என்று ஆங்கிலேய அதிகாரிகளாலேயே குறிப்பிடப்பட்டு அதற்காக வேட்டையாடப்பட்டவன் என்று பலவற்றைச் சொல்லலாம்.

விடுதலைப் போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்காகவும்தான் என்ற புரிதல் ஏற்பட்டதன் விளைவாக சாதி வேற்றுமைமையை வெறுத்துத் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கொந்தளித்தவன் பாரதி. இதைக் குழந்தைகள் மனதில் பதிய வைப்பது முக்கியம் என உணர்ந்து முனைந்தவன். விடுதலை வேட்கையின் மற்றொரு பரிமாணமாகப் பெண்ணடிமைத்தனத்தைச் சாடியதோடு அவ்வாறு சாடுகிற தகுதியை வளர்த்துக்கொள்ளத் தனக்குள்ளேயே போராடியவன். புரட்சியில் வெற்றி கண்ட உருசியாவை வாழ்த்தி மாகாளி கடைக்கண் வைத்தாள் என்று அத்தகையதோர் எழுச்சி இந்த மண்ணிலும் மலராதோ என்ற பேராசையை வெளிப்படுத்தியவன்.

இப்படியெல்லாம் பாட்டெழுதியதோடு கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் இயக்கத்தில் ஈடுபட்டவன், மாற்றத்திற்கான சிந்தனைகளாலும் முயற்சிகளாலும் தானே ஓர் இயக்கமாகத் திகழ்ந்தவன்…

நீ விரும்பும் மாற்றமாக நீயே இரு

கொல்கத்தா சென்று, விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதையைச் சந்திக்கிறான், மனைவியை அழைத்து வரவில்லையா என்று விசாரிக்கிற அவரிடம், பெண்களுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என்று கேட்கிறான், பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டு நாட்டுக்கு விடுதலை பெறக் கிளம்பிவிட்டீர்களா என்று நிவேதிதை கேட்க, பாரதியின் பார்வை அடியோடு மாறுகிறது. எந்த அளவுக்கு என்றால் மனைவி செல்லம்மாவிடம் மன்னிப்புக் கேட்கிற அளவுக்கு. ஆண் புத்தியோடு எதையோ சொல்லப்போக, ஊருக்குத்தான் பெண் சமத்துவம் பற்றிப் பேசுவீர்கள் போல என்று இடித்துக்காட்டிய செல்லம்மாவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் என்ற ஒரு பதிவு உண்டு.

சமூக மாற்றம் குறித்த சிந்தனை மாற்றத்தைத் தனது தோற்றத்திலும் வெளிப்படுத்தும் நோக்கத்தோடு குடுமியை மழித்து, பூணூலை அகற்றி, அடர் முறுக்கு மீசை வளர்த்து, முண்டாசு கட்டிக்கொண்டதில் தொடங்கி, வைதிகர்கள் வைது குவிக்க அதைப் பொருட்படுத்தாத பாரதி, ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பூணூல் மாட்டிவிட்டது வரையிலான கலகங்களைத் தனியே தொகுக்கலாம். தேசத்து மக்கள் பட்டினியின்றி வாழச் சுதந்திரம் தேவையெனக் கருதியவனின் வீட்டில் அடுத்த வேளை சமைப்பதற்கு அரிசி இருந்ததில்லை என்பதையும், “அவருக்குக் கொடுக்கும் உணவில் முக்கால் பகுதியை அவருடைய தோழர்களான காக்கைகளும் குருவிகளும் சாப்பிட்டுப் போவதைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாகத்தான் இருந்தேன்” என்று பிற்காலத்தில் செல்லம்மா சொன்னதையும் இணைத்து எவ்வளவோ பேசலாம்.

முக்காலத் தோழமை

bharathi 3
ஆயினும், அவனுக்கும் எனக்குமான ஒரு “முக்காலத் தோழமை” பற்றி இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும். பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்கள் சொன்னதைச் செய்த காலம், தீவிர கடவுள் நம்பிக்கையாளனாகத் தேங்கிப்போயிருந்த காலம், அதிலிருந்து விடுபட்டுப் புறப்பட்டுப் பகுத்தறிவையும் சமத்துவத்தையும் வரித்துக்கொண்ட காலம் ஆகிய மூன்று காலகட்டங்களிலும் பாரதி என் தோழனாகவே இருந்து வந்திருக்கிறான்.

எங்கள் பள்ளியில் காலை இறைவணக்கப் பாடல் பாடுவதற்கென்று சில மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இடம் பெற்ற எனக்கு, பாரதியின் வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் பாட்டும், தூயபெருங்கடல் சுப்பிரமணியனை நேயத்துடன் பணிந்தால் நெருங்கித் துயர் வருமோ என்று கிளியிடம் கேட்கும் பாட்டும் மிகவும் பிடித்துப்போனவை. அந்தப் பாடல்களை நான் தமிழ்ச் சொற்களுக்கான தெளிவோடு பாடியபோது ஆசிரியர்கள் தட்டிக்கொடுத்துப் பாராட்டினார்கள். வீட்டுப்பாடம் எழுதாமல் வருவது போன்ற குற்றங்களுக்காக ஆசிரியர்கள் தண்டனையளிக்காமல் விட்டதற்கு இந்தப் பாடல்களை நான் ஈடுபாட்டுடன் பாடியது ஒரு முக்கியமான காரணம்.

இரண்டாவது காலகட்டம், கடவுள் நம்பிக்கையில் தீவிரமாகச் சிக்கியிருந்த, அதனாலேயே பல முன் னைப்புகளை நானே முடக்கிக்கொண்ட ஆண்டுகள். வாழ்க்கை நிலைமைகளால் மனதில் துயரம் வாட்டிய நாட்களில் வீட்டில் சாமிப் படங்களுக்கு முன்பாகவும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சில குறிப்பிட்ட சாமி சிலைகளுக்கு முன்பாகவும் அமர்ந்து பாரதியின் வேறு பல தெய்வப்பாடல்களை நெக்குருகப் பாடுவேன். காரணம் நீங்காமல் துயரம் விலகாது என்றாலும் அந்தப் பொழுதின் மன அழுத்தம் குறைந்ததாகக் கருதிக்கொண்டு எழுந்து செல்வேன். நண்பர்கள் வீடுகளில் நடக்கும் வழிபாட்டு நிகழ்வுகளில்கூட என்னிடம் பாரதி பாடல்களைப் பாடுமாறு சொல்வார்கள், அது மிகப் பெரிய பெருமித உணர்வைத் தரும்.

கடவுள் உண்டா இல்லையா என்று கடிதப் பரிமாற்றங்களில் விவாதிக்கிற கட்டத்திற்கு வந்தபோது ஒரு கட்டத்தில், “தன்னம்பிக்கை இல்லாததுதான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணம்,” என்று ஒரு நண்பன் எழுத, “இல்லை, தன்னம்பிக்கையின் ஒரு வடிவம்தான் கடவுள் நம்பிக்கை,” என்று அடுத்த கடிதத்தை எழுதத் தொடங்கியவன், அந்தக் கருத்து இடிப்பதாக ஒரு சிந்தனை தோன்ற அப்படியே கடிதத்தை நிறுத்திக்கொண்டேன். இப்படியாகக் கடவுள் இல்லை என்ற தெளிவுக்கு நான் வந்த பிறகு, அப்போதும் என் கூடவே வரத் தொடங்கினான் பாரதி.

அவனுடைய ‘சின்னச்சங்கரன் கதை’, ‘பாஞ்சாலி சபதம்’ இவையெல்லாம் கடவுள் மறுப்பைத் தாண்டி பிற தளங்களிலும் வெளிச்சம் தந்தன. பொது மேடைகளில் மார்க்சிய இயக்கத் தலைவர்களும் அறிஞர்களும் பாரதியின் வார்த்தைகளையும் வாழ்க்கையையும் பேசியபோது, அவன் அரசியல் விடுதலைக்காக மட்டும் பாட்டெழுதியவன் அல்ல என்ற புரிதல் ஏற்பட்டது. அந்தத் துணிச்சலில்தான், அவனுடைய ”புதிய ஆத்திச் சூடி” பற்றி ஒரு கட்டுரைத் தொடர் எழுதத் தொடங்கினேன். அறம் செய விரும்பு, ஆறுவது சினம், தையல் சொல் கேளீர் என்ற பழைய ஆத்திச் சூடிகளிலிருந்து மாறுபட்டு, அச்சம் தவிர், ஆண்மை தவறேல், இளைப்பது இகழ்ச்சி, ஊண் மிக விரும்பு, சோதிடந்தனை இகழ், தையலை உயர்வு செய்…. என்று வழிகாட்டும் சொற்களுக்கு, நடப்புக் கால எடுத்துக்காட்டுகளோடு அந்தத் தொடர்கட்டுரையை எழுதினேன்.

ஏதோ ஒரு துணிவில் எழுதத் தொடங்கிவிட்டேனே தவிர, ஒவ்வோரு வாரமும் புதிய ஆத்திச்சூடியின் புதிய வரிகளை எடுத்துக்கொள்கிறபோதெல்லாம் பகுத்தறிவுக்கும் சமத்துவத்திற்கும் மாறான போதனைகள் ஏதாவது வந்துவிடுமோ என்று மனதுக்குள் ஒரு பதைப்போடுதான் படிப்பேன். இறுதிவரையில் என்னைக் கைவிடவில்லை பாரதி.

புதிய ஆத்திச்சூடிக்கான முன்னுரையில் மட்டும், அன்றைய மரபில் நின்று அந்த “வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள்” பாட்டை எழுதியிருப்பான். அது தனியொரு பாட்டாகத்தான் மக்களிடையே சென்றது. ரௌத்திரம் பழகவும், வெடிப்புறப் பேசவும், இழிவான போக்குகளை நையப்புடைக்கவும் சொல்லும் ஆத்திச் சூடி வரிகள் எதிலும் எந்தச் சாமியும் மதமும் இருக்காது. ஆகவேதான் அதில் “ஒற்றுமை வலிமையாம்” என்ற சொற்கள் உண்மையுடன் ஒலிக்கின்றன. இன்றைக்கும் தயக்கமின்றி எழுத்திலும் பேச்சிலும் பயன்படுத்திக்கொள்ள அவனுடைய கவிதைகள் தோழமையோடு துணை வருகின்றன.

பாரதியின் கவிதைகளோடு நின்றுவிடாமல் அவருடைய கட்டுரைகள், கதையாக்கம் என உள்ளே இறங்கினால், நீண்ட பல கனவுகள் நனவாகுமா ஆகாதா என்ற கேள்வியோடு 39 வயதில் கதை முடிந்துபோனவனின் பன்முகப் பரிணாமங்களும் பங்களிப்புகளும் தெரியவரும். பாவி, திருவல்லிக்கேணியில், அந்தக் கோயில் யானைக்குப் பக்கத்தில் போகாமல் இருந்திருந்தால், இன்னும் பல மடங்கு அவனைப் பற்றித் தெரிந்துகொள்கிற வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்குமே என்ற ஏக்கம் எஞ்சியிருக்கும்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவனா?

bharathi 2
அரசியல் – சமூகப் பார்வைகள் விரிவடைய விரிவடைய பாரதியை ஒற்றைப் பரிமாணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது என்ற புரிதலும் ஏற்பட்டது. கவிதைகளில் சுதந்திரத்தை வலியுறுத்தியும், மதவேற்றுமையை எதிர்த்தும், பாலின சமத்துவத்தை முன்வைத்தும் எழுதினான் என்றாலும், கட்டுரைகளில் ஆணாதிக்கச் சிந்தனைகளும் பிராமணியக் கருத்துகளும் பொதிந்திருப்பதைப் புதிய விமர்சகர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். “தந்தையர் நாடெனும் போதினிலே…” என அவன் எழுதியதில், “தாய்நாடு” என்று வழக்கமாகச் சொல்லப்படுவதை மாற்றிச் சொன்னால் என்ன என்ற கவிமுனைப்பும் இருக்கிறது, அதே வேளையில் “ஃபாதர்ஸ் லேண்ட்” என்று குறிப்பிடும் மேற்கத்தியத் தாக்கமும் இருக்கிறது, அத்துடன் உள்நாட்டு ஆணாதிக்கக் கலாச்சாரப் பிடிப்பும் இருக்கிறது என்ற விமர்சனத்தை ஒதுக்கிவிட வேண்டியதில்லை. பாடல்களில் பிராமணியத்தைத் தூக்கிப்பிடிக்கும் வெளிப்பாடுகளேகூட இருக்கின்றன. இன்று மதவாத அரசியல் செய்வோருக்கு உதவிசெய்யக்கூடிய கருத்துகளையும் பாரதியின் கட்டுரைகளில் காண முடியும்.

இதற்குப் பிறகும்கூட அவன் என் கூடவே வருகிறான். பாரதியின் குடும்பச் சூழல், அன்றிருந்த வாய்ப்புகள், கட்டாயங்கள் இவற்றோடு அந்தச் சிந்தனைகளை அவன் வெளிப்படுத்திய கால நிலைமைகள், அற்பாயுசில் முடிந்துபோன பயணம் என்பதையெல்லாம் பொருத்தியே பார்க்க வேண்டியிருக்கிறது. படைப்புகளில் மிகுதியாக வெளிப்படுவது எது, மக்களிடையே வெகுவாகத் தாக்கம் செலுத்திய படைப்புகள் எவை என்று ஒப்பிட்டுப் பார்க்கிறபோது முற்போக்காளர்களின் நண்பனாகவே அவன் வந்திருப்பான் என்று ஊகிக்கலாம்.

“சாதி மதங்களைப் பாரோம், உயர் ஜென்மம் இத்தேசத்தில் எய்தினராயின்“ என்று சொன்னதன் மூலம், மதவாத அரசியல் செய்கிறவர்களை விமர்சிக்கிறான். அறிவார்ந்த விமர்சனப் புலத்தில் அவனது சறுக்கல்கள் பற்றிப் பேசிக்கொண்டே, சமூகம் சார்ந்த வினைத்தளத்தில் அவனது வார்த்தைகளையும் வாழ்க்கையையும் துணையாகக் கொள்ள முடியும். நவீன வசதிகளும் வாய்ப்புகளும் பல்கிப் பெருகிவிட்ட இன்றைய காலத்திலேயே இறை நம்பிக்கையுடனும் மதப்பற்றுடன் இருக்கிற சக மக்களோடு உரையாட பாரதியைப் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad