தமிழரின் தொன்மையைக் காட்டும் சான்றுகள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

தமிழரின் தொன்மையைக் காட்டும் சான்றுகள்

தமிழரின் தொன்மையைக் காட்டும் சான்றுகள்

தமிழர் வரலாற்றின் தொன்மைக்கான சான்றுகள் மேலும் பல இடங்களில் கிடைத்துவருகின்றன. சாத்தனூர், திருவில்லிப்புத்தூர், கொடுமணல் ஆகிய இடங்களைப் போலவே மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையின் கீழும் முதுமக்கள் தாழிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதேபோல, இதன் அருகேயுள்ள மம்சாபுரம், குறவன்கோட்டை ஆகிய இடங்களின் அருகேயும் பழமையின் அடையாளங்கள் பூமியில் புதைந்துள்ளன என்றும் தொல்லியல் ஆய்வு நிபுணர்கள் சொல்கின்றனர். இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என்று குறிப்பிடுகின்றனர்.

தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரம்

கீழடியில் மத்தியத் தொல்லியல் அகழாய்வுத் துறையினர் மேற்கொண்ட ஆய்வில் வடமொழி எழுத்து, மண்பானைகள் உட்பட 5,300 சங்க காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. அது குறித்து உரிய ஆய்வு நடத்த மத்திய அரசுக்கு வேண்டுகோள்கள் விடப்பட்டன. மாமதுரை 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான நகரம். ஏதென்ஸ், ரோம் ஆகிய நகரங்களுக்கு ஒப்பத் தமிழகத்தின் கலாச்சாரத் தலைநகரம் மதுரை.
தமிழ்நாட்டில் நெடுங்காலமாகச் சிறப்புற்று விளங்கும் நகரங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது மதுரை. இந்நகரின் தொன்மையைப் பேசும் சான்றுகள் நிறையவே உண்டு. பிளினி, தாலமி போன்ற கிரேக்க அறிஞர்கள், மாவீரன் அலெக்ஸாண்டரின் தூதரான மெகஸ்தனிஸ் போன்ற வெளிநாட்டவரின் எழுத்துக் குறிப்புகளும் சங்க இலக்கியங்களின் பாடல் வரிகளும் விளக்குகிற தகவல்கள், இந்நகரம் 2500 ஆண்டுகளுக்கும் மேலான பழமையையும் இந்தியாவின் தொன்மை நகரங்களில் ஒன்று என்பதைச் சொல்லும் சான்றுகளாகின்றன. இருந்தாலும் மதுரை மாநகரைப் பற்றிச் சொல்லும்படியான அகழ்வாய்வுச் சான்றுகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை.

மதுரை வைகை ஆற்றங்கரையில் கடந்த 2015 ஆண்டு முதல் மத்திய தொல்துறை அகழாய்வுத் துறை பெங்களூர் பிரிவு கீழடியில் நிலத்தை வெட்டி அகழாராய்ச்சி செய்ததில் பல தரவுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 43 தொல்லியல் குழிகள் வெட்டப்பட்டன. சங்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி 3000 ஆண்டுத் தொன்மையைக் காட்டுகிறது. முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம் போன்ற பண்டைய பயன்பாட்டுப் பொருட்கள் கிடைத்தன. இது குறித்த சத்தியமூர்த்தி குழுவின் அறிக்கை வெளிவராமல் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது.

ஈரோடு சென்னிமலை அருகேயுள்ள கொடுமணல், அழகன்குளம், மருங்கூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பானையோடுகள், கரூரில் கிடைத்த மோதிரம், மதுரையில் கொங்கற்புளியக்குளம், விக்கிரமங்கலம் மலைகளில் காணப்படும் எழுத்துக்கள்; கேரளவின் எடக்கல் மலை, இலங்கை ஆனைக்கோட்டை செப்பு முத்திரை போன்றவற்றில் உள்ள தமிழ் எழுத்துக்களைக் கொண்டே தமிழின் தொன்மையை அறிந்துகொள்ள முடியும்.

அகழராய்ச்சிகளின் போதாமை
findings 1
தமிழகத்தில் அகழராய்ச்சி தொடர்ந்து நடைபெற்றாலும் அதற்கான முடிவுகளும் செயல்பாடுகளும் திருப்திகரமாக இல்லை. அரிக்கமேடு, காவிரிபூம்பட்டினம், உறையூர், ஆதிச்சநல்லூர், கொற்கை, முசிறி, வைகை ஓரத்தில் வருசநாடு, அழகன்குளம், கொடுமணல், பொருந்தல், கரூர் அருகே அமராவதி ஆற்றங்கரை, பாடியூர் போன்ற இடங்களில் அகழாய்வில் பல தரவுகள் கிடைத்தன. குறிப்பாக இறந்தவர்களின் எலும்புகள், முதுமக்கள் தாழிகள்தான் கிடைத்தன. ஆனால் கீழடியில் வேறு சில அரிய பொருட்கள் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த கழிவுநீர் கால்வாய்களைப் போன்றவை மொகஞ்சதரோ, ஹரப்பாவில்தான் இருந்தன.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில், இப்படியான தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்ற செய்திகள் உள்ன. தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டால் இன்னும் பல தரவுகள் நடக்குக் கிடைக்கும்.

இந்தியத் திருநாட்டின் வடபுலத்தில் பாடலிபுத்திரம், கன்னோஜி, உஜ்ஜயினி, இந்திரபிரஸ்தம், தட்சசீலம் போன்ற ஒரு சில பெருநகரங்களையே சிறப்பாகச் சொல்ல முடியும். ஆனால் பண்டைய தமிழகத்தில் சிறிய நிலப் பரப்பிலேயே சிறப்பு வாய்ந்த நகரங்களாக, தெற்கேயிருந்து களக்காடு, திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, கொற்கை, பழைய காயல், ஆதிச்சநல்லூர், தென்காசி, திருவில்லிப்புத்தூர், இராமநாதபுரம், மதுரை, பரம்புமலை, தொண்டி, உறையூர், கரூர், தகடூர், முசிறி, காங்கேயம், காவிரிப்பூம்பட்டினம், மாமல்லபுரம், காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் சானூர், குன்றத்தூர், பட்டறைப்பெரும்புதூர், அத்திரம்பாக்கம், பரிக்குளம், பூண்டி மற்றும் திருக்கோவிலூர் என வரலாற்றைச் சொல்லும் எண்ணற்ற நகரங்கள் இருந்துள்ளன. இதிலிருந்து வடபுலத்து நாகரிகத்தைவிடத் தமிழரின் நாகரிகமும் ஆளுமையும் பெரிதாக இருந்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.

மேலும் அகழ்வாராய்ச்சிகள் தேவை
keezhadi 3
புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் அனுபாமாவும் இலங்கை நாட்டைச் சேர்ந்த முனைவர் பிரேமதிலகாவும் இணைந்து தமிழகத்தில் அகழாய்வு மேற்கொண்டனர். அவர்களின் ஆய்வு மூலம், தமிழ் மண்ணில் ஆதிகாலத்தில் நெல் பயிரிடப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நெல்லின் தாவரப் பெயர் ஒரிசா சத்வியா இண்டிகா என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,

1. அசோகருக்கு முந்தைய காலத்திய பண்டைய தமிழகத்தில் தமிழ் எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

2. கி.மு. 500இல் தமிழகத்தில் நெல் சாகுபடி நடந்து வந்துள்ளது.

3. தமிழகத்தில் ஆதிச்சநல்லுர், கீழடி, அரிக்கமேடு, அழகன்குளம், கொடுமணல் போன்ற தொன்மைமிக்க பல இடங்களில் வரலாற்று, தொல்லியல் ஆர்வலர்கள் மூலமாகவே பல பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அரசும் இதில் கூடுதல் அக்கறை எடுத்து அந்த இடங்களில் முறைப்படி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது போன்று, சென்னையிலிருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கற்காலம் முதல் வரலாற்றுத் தொடக்க காலம் வரையிலான தொல்லியல் சான்றுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறது. திருவள்ளூரிலிருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் கொற்றலை ஆற்றுப் படுகையிலிருந்து சிறிது தூரத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல தரவுகள் கிடைத்துள்ளன.

ஆனால் தமிழனுடைய வரலாறு சரியாக, சீராக, நேராக எழுதப்படாததால், ஏதோ குப்தர் காலம் தான் பொற்காலம் என்றும், மௌரியப் பேரரசு பலம் வாய்ந்தது என்பது போலவும் கூறப்படுகின்றது. சரியான தரவுகள் இல்லாததால் தமிழனுடைய சிறப்பைச் சொல்ல முடியாமல் போய்விட்டது. எனவே, இத்தகைய அகழ்வாய்வு, கல்வெட்டு, சிற்ப ஆய்வுகள் மேலும் வளர வேண்டும். இவையாவும் அரசியல், வட்டாரம் போன்ற மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு நடைபெற வேண்டிய நடவடிக்கை ஆகும். இது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad