பள்ளிகள் திறப்பால் இப்படியொரு ஆபத்து; அச்சத்தில் மாணவர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 4, 2021

பள்ளிகள் திறப்பால் இப்படியொரு ஆபத்து; அச்சத்தில் மாணவர்கள்!

பள்ளிகள் திறப்பால் இப்படியொரு ஆபத்து; அச்சத்தில் மாணவர்கள்!

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் சீற்றம் பெரிதும் தணிந்திருக்கிறது. தினசரி தொற்று 1,600க்கும் கீழ் சரிந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக புதிய பாதிப்புகள் சற்றே அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இரண்டாவது அலை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக பல்வேறு தரப்பினரும் நம்பிக்கை அளித்தனர். அதேசமயம் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. எனவே மாணவர்களுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படாது என்று கருதி, பள்ளி, கல்லூரிகள் திறப்பிற்கு மாநில அரசு அனுமதி அளித்தது.

பள்ளிகள் திறந்தவுடன் பரவிய கொரோனா

அதன்படி, கடந்த ஒன்றாம் தேதி முதல் 9-12 வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு வரவழைக்கப் பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்து நான்கு நாட்களே ஆன நிலையில், நாமக்கல்லில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கும், கடலூரில் இடைநிலை ஆசிரியை ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சக மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அரசுப் பேருந்துகளில் பெரிய சிக்கல்

சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசுப் பேருந்துகளில் செல்லும் மாணவர்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். ஏனெனில் பேருந்துகள் போதிய சரீர இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. எப்போதும் நெரிசல் நிறைந்தே காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தமிழக அரசு கண்டு கொள்ளுமா?


மேலும் பல பகுதிகளில் போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் கிடைக்கும் ஓரிரு பேருந்துகளில் மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி, பிற பயணிகளுடன் மிகவும் நெருக்கமாக பயணிக்கும் சூழல் உண்டாகிறது. இதனால் கொரோனா பரவல் ஏற்படுமோ, பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்துவிடுமோ என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது.

வகுப்பறைகளில் சரீர இடைவெளியை பின்பற்றினாலும் அரசு பேருந்துகளில் நெருக்கடியான சூழல் இருப்பதால் அதில் பயணிக்கும் மாணவர்கள் மூலம் பிறருக்கு நோய்த்தொற்று பரவக் கூடுமோ என்ற அச்சம் நிலவுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே அரசு தரப்பில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும். மாணவ, மாணவிகள் பள்ளி சென்று வரும் நேரங்களில் தீவிர கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad