நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் 2016ஆம் ஆண்டு நடைபெறவேண்டியது. பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய் 2019ஆம் ஆண்டு இறுதியில் ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிலும் ஒன்பது மாவட்டங்களுக்கு அப்போது தேர்தல் நடத்தப்படவில்லை..
விடுபட்ட அந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 4ஆம் தேதி, “தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஏழு மாத கால அவகாசம் வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களையெல்லாம் உரிய நேரத்தில் நடத்த முடிகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?” என்று கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.

அதற்கு தேர்தல் ஆணையம், “எங்களுக்கு 7 மாத கால அவகாசம் வேண்டாம். நான்கு மாத கால அவகாசம் போதும்” என தேர்தல் தெரிவித்திருந்தது. இதுபற்றி புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.

அந்த வகையில் மீண்டும் வழக்கு இன்று (செப்டம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்திட அவகாசம் அளிக்கலாம். அதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவித்தார்.

“நீங்களே விரைவில் நடத்த வேண்டும் என்று முன்பு கூறினீர்கள். இப்பொழுது நீங்களே அவகாசம் அளிக்கலாம் என்று சொல்கிறீர்கள்” என தலைமை நீதிபதி கடிந்து கொண்டார்.

“தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வரும் ஏப்ரல் 2022 வரை அவகாசம் கேட்டிருந்தது. மழைக்காலம், கொரோனா தொற்றில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள்,மாநகராட்சிகளுக்கு வார்டு சீரமைப்பு, இட ஒதுக்கீடு செய்ய வேண்டியமை உள்ளிட்ட காரணங்களை காட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. ஆனால் இவையெல்லாம் உரிய காரணங்கள் இல்லை. எனவே நான்கு மாத கால அவகாசம் மட்டுமே தருகிறோம். அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad