போயிங் நிறுவனத்துக்கு விமான பாகங்கள்: கலக்கும் சேலம் நிறுவனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 27, 2021

போயிங் நிறுவனத்துக்கு விமான பாகங்கள்: கலக்கும் சேலம் நிறுவனம்!

போயிங் நிறுவனத்துக்கு விமான பாகங்கள்: கலக்கும் சேலம் நிறுவனம்!

சேலத்தில் அமைந்துள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் உலகளாவிய விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்குவதற்கு நீண்ட கால ஒப்பந்தத்தை போயிங் இந்தியா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் முதன்முறையாக போயிங் விமான நிறுவனத்திற்கு, முக்கிய விமான பாகங்கள் தயாரித்து வழங்க சேலத்தில் உள்ள ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்-க்கான ஒப்பந்த உத்தரவை போயிங் இந்தியா நிறுவனத்தின் விநியோக மேலாண்மை இயக்குநர் அஸ்வனி பார்கவா வழங்கினார். அதனை ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், கடந்த 1988ஆம் ஆண்டு ஒரு குறுந்தொழில் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, படிப்படியாக வளர்ந்து சிறு நிறுவனமாகவும் தற்போது நடுத்தர நிறுவனமாக உயர்ந்துள்ளது. மூன்று சகாப்தங்களுக்கு மேலாக, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் வாடிக்கையாளர்களுக்கு உயர் துல்லியம் மற்றும் உயர்தர பாகங்களை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உற்பத்தித் திறன்கள், செயல்முறைகள், தனித்துவமான சோதனை வசதிகள் மற்றும் பல விமான தகுதி சார்ந்த மற்றும் தரச் சான்றிதழ்களைக் கொண்டுள்ளது

ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ரூ. 150 கோடி முதலீட்டில் அடுத்த 24 மாதங்களில் ஓசூரில் 1,25,000 சதுர அடி பரப்பளவு கொண்ட கட்டிடத் தளத்தில் சிவில் ஏரோஸ்பேஸ் உற்பத்திக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய உற்பத்தி வசதியையும் தற்போது சேலத்தில் அமைந்துள்ள உற்பத்திக் கூடத்தை 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்த கூடுதல் வசதி 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

இந்த சாதனை முதல்வர் ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வையான “தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது” (Made in Tamil Nadu) என்பதின் ஒரு படியாக அமையும் என்று தமிழக அராசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தரம், துல்லியம் மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் போயிங் இடையேயான ஒத்துழைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். இது சேலம் மற்றும் ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் வழித்தடத்திலுள்ள வளர்ந்து வரும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad