வரம்பு மீறும் திமுக அரசு; கேலிக்கூத்தாகும் நிர்வாகம் - அதிமுக கடும் தாக்கு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 9, 2021

வரம்பு மீறும் திமுக அரசு; கேலிக்கூத்தாகும் நிர்வாகம் - அதிமுக கடும் தாக்கு!

வரம்பு மீறும் திமுக அரசு; கேலிக்கூத்தாகும் நிர்வாகம் - அதிமுக கடும் தாக்கு!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இதையடுத்து முதல்முறை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். கொரோனா நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டே பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டு வருகிறது. மறுபுறம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவதில் திமுக கோட்டை விட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

திமுக மீது குற்றச்சாட்டுகள்

மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த சூழலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத திமுக நிர்வாகிகள் சிலர், அரசின் அதிகாரத்தோடு செயல்படும் போக்கு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக அதிமுக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. குறிப்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது அம்மா”வில் இன்று வெளியான செய்தியில் திமுக மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்சி நிர்வாகிகளின் அட்ராசிட்டி

அதாவது, நாகப்பட்டினத்தில் திமுக மாவட்ட செயலாளர் நல்லாசிரியர் விருது வழங்கியிருக்கிறார். அவர் என்ன சட்டமன்ற உறுப்பினரா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதியா? எதுவுமே இல்லை. அப்படியிருக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேடையில் நல்லாசிரியர் விருதை திமுக மாவட்ட செயலாளர் முன்நின்று வழங்கியிருக்கிறார்.

அருவருப்பான அரசியல் கூத்துகள்

இது ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தை கேலிக் கூத்தாகும் செயல் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் தங்க தமிழ்ச்செல்வன். இவர் மாநில அரசு அதிகாரிகளை தனது கட்சி அலுவலகத்திற்கே வரவழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அதுமட்டுமா?

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மாவட்ட ஆட்சித் தலைவரை தங்கள் கட்சி அலுவலகத்திற்கே அழைத்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தியுள்ளார். திமுக அரசின் இத்தகைய சட்டவிரோதமான கூத்துகள் அருவருப்பை தருகின்றன. தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி பொறுப்பில் இல்லை. இந்த சூழலில் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் சும்மாவா இருப்பார்கள்? என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad