கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா: உயர் நீதிமன்றம் காட்டம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா: உயர் நீதிமன்றம் காட்டம்!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதா: உயர் நீதிமன்றம் காட்டம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையமும் விசாரித்து வருகிறது. அதேபோல், இச்சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்தது. அந்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையில் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து மதுரையை சேர்ந்த ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மனித உரிமை ஆணையம் சீல் வைத்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


இதையடுத்து, தேசிய மனித உரிமை ஆணைய அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

மேலும், அறிக்கையின் நகலை தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், மனுதாரருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அறிக்கையை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என அறிவுறுத்தினர்.


இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக, மக்கள் மீது துப்பாக்கியை காட்ட கூடாது எனவும். கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசில் இவ்வளவு ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க கூடாது எனவும் இதுபோல மீண்டும் ஒரு சம்பவம் நடக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து, தேசிய மனித உரிமை ஆணைய பரிந்துரைப்படி, துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கும், பலத்த காயமடைந்தவர்களுக்கும் கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த வழக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவின் விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad